லைஃப்ஸ்டைல்

‘கிரெடிட் கார்டு’ கட்டணங்கள் பற்றி அறிவீர்களா?

Published On 2019-05-07 03:26 GMT   |   Update On 2019-05-07 03:26 GMT
கிரெடிட் கார்டை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால், ஆபத்பாந்தவன் போல அது நமக்குக் கைகொடுக்கும். அதேநேரம், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் சிரமம்தான்.
கூப்பிட்டு கொடுக்கிறார்கள் என்பதால் கிரெடிட் கார்டை வாங்கிவிடும் பலரும்கூட அதற்கான கட்டணங்களை அறியாமல் இருக்கிறார்கள்.

கிரெடிட் கார்டை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால், ஆபத்பாந்தவன் போல அது நமக்குக் கைகொடுக்கும். அதேநேரம், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் சிரமம்தான்.

சரி, நீங்கள் கிரெடிட் கார்டை பயன் படுத்துகிறீர்களா? அதற்கான கட்டணங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

அந்த விவரம், இதோ...

சேர்க்கைக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம்: பெரும்பாலான வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு வழங்குவதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு ஆண்டுக் கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிப்பார்கள். சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் விலக்கு அளித்துவிட்டு இரண்டாம் ஆண்டில் இருந்து கட்டணங்களை விதிக்கும். சில நேரங்களில், வங்கிகள் குறிப்பிடும் வரையறைக்குள் செலவு செய்தால் இதுபோன்ற கட்டணங்களில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படக்கூடும்.

வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், நம்முடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை எவ்வித வட்டியும் வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் நம்முடைய கணக்கிலிருந்து நாம் செய்த அதிகப்படியான செலவுத்தொகையை வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும். சில பிரிமியம் கிரெடிட் கார்டுகளை எங்கே உபயோகித்தாலும், எப்போது உபயோகித்தாலும் நிதிசார் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் நாம் பணம் எடுத்துக்கொள்ளலாம். அவசரத் தேவைக்கு மட்டுமே இவ்வாய்ப்பைப் பயன்படுத்துவது நல்லது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் வாங்கும் பொருளுக்கான கடன் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டித்தொகை வசூலிக்கப் படுவதில்லை. ஆனால், இப்படியான வட்டி விலக்குக்கு உட்பட்ட காலத்தில் நாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும். ஏதேனும் அவசரத் தேவைக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுத்தால், எவ்வளவு விரைவாகத் திரும்பச் செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

அதிகப்படியான செலவுகளுக்கான கட்டணங்கள்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ உங்களுக்கு அபராதக் கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக, உங்களுடைய கிரெடிட் கார்டை பயன் படுத்தி ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கையில், நீங்கள் ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருந்தால் நீங்கள் செலவு செய்த அதிகப்படியான தொகைக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டி அபராதமாக விதிக்கப்படும். எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் செய்யும் செலவுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு பெரும் தொகைக்குப் பொருளை வாங்கும்போது பற்றாக்குறையாக உள்ள தொகையை உங்கள் கிரெடிட் கார்டு கணக்குக்கு வங்கியில் டெபாசிட் செய்துவிடுவது நல்லது.

கால தாமதத்துக்கான கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமதக் கட்டணம் நமக்குப் பலவகையில் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவதாக, கடன் பெறுவதற்கான நம்முடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இரண்டாவதாக, நாம் ஒவ்வொரு முறை தாமதமாகப் பணத்தைச் செலுத்தும் போதும் அதற்குரிய அபராதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சில வங்கிகள் தாமதக் கட்டணத்தை நிலையான விகிதத்தில் வசூலிக்கின்றன. சில வங்கிகள், செலுத்த வேண்டிய தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. உங்களுடைய கிரெடிட் கார்டு தொகைக்கான மின்னணு பணப் பரிவர்த்தனை (ECS) ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அதற்காகவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு வேளை கிரெடிட் கார்டின் வழியாகச் செலவுசெய்த முழுத் தொகையையும் திரும்பச் செலுத்தமுடியாவிட்டால், குறைந்த அளவு தொகையாவது செலுத்த வேண்டும். அதன்மூலம் அபராதக் கட்டணத்தைத் தவிர்க்கலாம்.

வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்கான கட்டணம்: கிரெடிட் கார்டை உபயோகித்து இணையம் வழியாகவோ அல்லது விற்பனை மையம் வழியாகவோ வெளிநாட்டுப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் அதற் கெனத் தனியான கட்டணம் விதிக்கப்படும். வங்கிகளைப் பொறுத்து 1.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளி நாடுகளில் பணம் எடுத்தாலும் தனியாகக் கட்டணம் விதிக்கப்படும். எனவே இதுபோன்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், வெளிநாடு களுக்குச் செல்லும்போது கிரெடிட் கார்டை தவிர்த்து போதுமான பணம் அல்லது டிராவல் கார்டை எடுத்துச் செல்லுவது நல்லது.

தொகை பரிமாற்றத்துக்கான கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலமாகச் செலுத்தும்போது அதற்கெனத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். உயர் மதிப்புக் கொண்ட கிரெடிட் கார்டுகளுக்கு இத்தகைய கட்டணம் விதிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் மாற்றம் செய்யும் தொகைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கட்டணம் விதிக்கப்படும். கடன் தொகைக்காக ஒரு கிரெடிட் கார்டில் இருந்து இன்னொரு கிரெடிட் கார்டுக்குப் பணப்பரிமாற்றம் செய்வது கூடுதல் செலவை உண்டாக்கும். எனவே கிரெடிட் கார்டு மீதான கடன் தொகையை உரிய காலத்துக்குள் செலுத்துவதே எப்போதும் நல்லது.
Tags:    

Similar News