பெண்கள் உலகம்
பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் எப்படி கிளம்ப வேண்டும்?

பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் எப்படி கிளம்ப வேண்டும்?

Published On 2021-10-13 12:50 IST   |   Update On 2021-10-13 14:47:00 IST
தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்துப் பழக்கிவிடுவது நல்லது.
கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை.

இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதி
நீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.

Similar News