லைஃப்ஸ்டைல்
பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வெங்காய லேகியம்

பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வெங்காய லேகியம்

Published On 2021-09-23 07:16 GMT   |   Update On 2021-09-23 07:16 GMT
தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது.
சிறிய வெங்காயத்தை நாம் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கிறோம். மாமிசம், மீன், காய்கறி, பலகார வகைகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருளாக சிறிய வெங்காயம் இருக்கிறது. உணவுகளுக்கு இது அதிக சுவையை தந்தாலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக இருந்துவருகிறது.

தாய்ப்பாலை பெருகவைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. பிரசவித்த பின்பு பெண்களின் கருப்பை மீண்டும் சுருங்கி இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும். அதற்கு தேவையான மருத்துவகுணங்களும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சுகபிரசவத்தின்போது பெண்களின் பிறப்பு உறுப்பின் சுவர்ப்பகுதி பலவீனமாகும். அதனை பலப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வரும் சக்தியும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. கர்ப்பிணிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது. தாய்மையடைய விரும்பும் பெண்களும், கர்ப்பமடைந்த பெண்களும், பிரசவித்த பெண்களும் இதனை அதிகம் பயன்படுத்தலாம். ஆண்மை சக்தியை பெருக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும் இதனை அதிகம் சாப்பிட்டு வரலாம். செல்களை புதுப்பித்து இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் இது துணைபுரிகிறது.

வயிற்றை சுத்தப்படுத்தும் ஆற்றலையும் சிறிய வெங்காயம் பெற்றிருக்கிறது. வயிற்றில் ஏற்படும் அவஸ்தைகளை தீர்த்து, பசியை தூண்டி ஜீரணத்தன்மையை ஊக்குவிக்கவும் இதனால் முடியும். குடல்களில் ஏற்படும் பருக்கள், வீக்கம், காயம் போன்றவைகளை குணப்படுத்தும் மருத்துவகுணமும் இதில் அடங்கியிருக்கிறது.

சிறிய வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறிய வெங்காயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சிவப்பு நிறம் தருவது, லூட்டின் என்ற வர்ண கலவையாகும். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் தன்மைகொண்டது.

சிறிய வெங்காயத்தை பயன்படுத்தி லேகியம் தயாரித்து சுவைக்கலாம். இது பலவிதங்களில் உடலுக்கு பலம் சேர்க்கும். இந்த லேகியத்தை தயாரிக்கும் முறை:

சுத்தம் செய்த சிறிய வெங்காயத்தை 300 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு பூண்டுவை இடிக்கவும். இவை இரண்டையும் 500 கிராம் தேங்காய் பாலில் நன்றாக வேகவைத்து குழைக்கவும். 180 கிராம் வெல்லத்தை கரைத்து அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள்.

அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும். ஒரு சிட்டிகை சுக்குத் தூள் மற்றும் 4 ஏலக்காய்களையும் தூளாக்கி சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள். இதுதான் வெங்காய லேகியம். இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
Tags:    

Similar News