பெண்கள் உலகம்
கர்ப்ப கால உடல்நலம்

குளிரும்.. கர்ப்பமும்..

Published On 2021-09-11 13:01 IST   |   Update On 2021-09-11 13:01:00 IST
குளிர் காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடல் நலனை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குளிர் காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடல் நலனை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குளிரில் அவர்களது சருமம் வறட்சிக்குள்ளாகும்.

அப்போது தோல் அரிப்பு பிரச்சினை ஏற்படும். குளித்த பிறகு சருமத்தை நன்றாக துடைக்காவிட்டால், அதுவும் தோல் அரிப்பு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். கர்ப்ப காலத்தில் உடலை தூய்மையாக பராமரிக்க வேண்டியதும் அவசியமானது. சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அதுவும் நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். போதுமான நேரம் தூங்குவதும் அவசியமானது. அது வயிற்று சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

குளிர்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க உப்பு, சர்க்கரையின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். காபின் கலந்திருக்கும் காபி, டீ, குளிர் பானங்கள், சாக்லேட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அயோடின் பங்களிப்பு இன்றியமையாதது. அது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை. மேலும் சிசுவின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தவும் துணை புரிகிறது. இரும்பு சத்து அதிகமுள்ள பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ் போன்றவற்றை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் புரத சத்துக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கு பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவதும் நல்லது. தானிய வகைகளை சாப்பிடுவதும் உடல்நலத்தை மேம்படுத்த உதவும். நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், பீன்ஸ், சூரிய காந்திவிதைகள், பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் நல்லது.

குளிர்ந்த காற்று சருமத்தில்படும்போது நீரிழப்பு பிரச்சினை ஏற்படக்கூடும். தோல் வியாதிகளும் உண்டாகும். சிறுநீர் தொற்று பிரச்சினையும் உருவாகும். உடலில் நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு இளநீர், சூப் வகைகள் பருகி வரலாம். குளிர்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

Similar News