ஆரோக்கியம்
பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோய்

பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோயின் அறிகுறிகள்

Update: 2021-09-03 06:27 GMT
தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலே அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இந்த நோய் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தசை நார் தேய்வு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். உடலில் உள்ள தசை நார்களின் செயல்பாட்டுக்கு புரதத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதில் குறைபாடு ஏற்படும்போது தசை நார்கள் பலவீனமாகி விடும். அதன் காரணமாக உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழந்துவிடும். நாளடைவில் எழுந்து நடமாட முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.

அத்தகைய பாதிப்புக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் பெயர்: ரேணு, நீது, சோனியா, இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். பள்ளிப்படிப்பின்போது ஒழுங்காக நடக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த சமயத்தில் தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதாரணமாக இருந்துவிட்டார்கள். அதுவே பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. அதுபற்றி 43 வயதாகும் ரேணு சொல்கிறார்:-

‘‘15 வயதில் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாக்டர்களும் குழம்பி போனார்கள். என் உறவினர்களில் சிலர் நான் ரொம்ப பலவீனமாக இருப்பதாக கூறினார்கள். சிலர் காய்ச்சல் வந்ததால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் கால்கள் தளர்ந்துபோனது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட எனக்கு மனமில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணத்தை அறிவதற்கு ஏராளமான டாக்டர்களை அணுகினேன். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள தசைகள் பலவீனமாகி நிலைமை மோசமானது. எனக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான பாதிப்பு என்பதை கண்டறிவதற்குள் உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது’’ என்கிறார், ரேணு.

ரேணுவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் சகோதரிகள் நீதுவும், சோனியாவும் அதே போல் பாதிக்கப்பட்டார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டாலும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவம் கைகொடுக்கவில்லை. இப்போது மூன்று பேரும் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ரேணுவும், நீதுவும் சேர்ந்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். சோனியா பட்டப்படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

‘‘எனக்கு 24 வயதில் கால்கள் பலவீனமாக தொடங்கியது. ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எங்களை போல் தசை பாதிப்பு பிரச்சினைக்குள்ளாகி இருப்பவர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியில் சேர தகுதி இருந்தும் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை’’ என்று கவலையுடன் கூறுகிறார், சோனியா.

தற்போது மூன்று பேரும் தசைநார் தேய்வு பாதிப்புக்கான சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலேஅதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். நடப்பதற்கு சிரமம், நிற்பதற்கு அசவுகரியம், சுவாச கோளாறு, பேசுவதற்கு சிரமம், அன்றாட வேலைகளுக்கே அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலை, தசைகள் பலவீனமாக இருப்பது, எலும்புகள் அடர்த்தி குறைவது, நுரையீரல் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் விழிப்பாக இருக்க வேண்டும். அது தசைநார் தேய்வு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

Tags:    

Similar News