பெண்கள் உலகம்
பெண்களின் அந்த மூன்று நாள் வலியும்... பாட்டி வைத்தியமும்..

பெண்களின் அந்த மூன்று நாள் வலியும்... பாட்டி வைத்தியமும்..

Published On 2021-08-09 09:46 IST   |   Update On 2021-08-09 09:46:00 IST
பெண்களின் மாதாந்திர அவஸ்தையான மாதவிடாய் வலியை போக்க ஏராளமான பாட்டி வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
பெண்களின் மாதாந்திர அவஸ்தை மாதவிடாய். சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்…

* முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம். இதனால் வயிற்றுவலி குறையும்.

* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.

* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும். சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

* வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

Similar News