லைஃப்ஸ்டைல்
சுகம் என்று நினைத்தேன்.. சுமையானதேனோ..

சுகம் என்று நினைத்தேன்.. சுமையானதேனோ..

Published On 2021-08-02 07:46 GMT   |   Update On 2021-08-02 07:46 GMT
தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தோள் பையை எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் தோள் பையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். தாங்கள் எடுத்து செல்லும் தோள் பை ஸ்டைலாகவும், அணிந்திருக்கும் ஆடைக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முன்பெல்லாம் ‘ஹேன்ட் பேக்’ பேஷனாக பார்க்கப்பட்டது. இன்றோ அது அத்தியாவசியமானதாக மாறிவிட்டது.

இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் ஒன்று இருக்கிறது. பெண்கள் எவ்வளவு அழகான தோள்பையை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைவிட, அதன் உள்ளே என்னென்ன பொருட்களை வைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பது முக்கியம். என்னென்ன பொருட்கள் என்பது, அவர்கள் எந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை பொறுத்தது.

பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய பேர் அது பற்றி சிந்திப்பதில்லை. தேவைக்கு அதிகமாக தோள் பையில் பொருட்களை திணித்து வைத்திருப்பார்கள். அதில் பாதி பொருட்களை பயன்படுத்தாமலேயே வீட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவார்கள்.

பெண்கள் தங்கள் தேவைக்காக பொருட்களை வாங்கும்போது, தங்கள் தோள்பையில் வைக்கும் அளவுக்கு அவைகளில் சிறிய பொருட்களையும் தேர்ந்தெடுப்பார்கள். கண்ணாடி என்றால் சிறிய கண்ணாடி, சீப்பு என்றால் சிறிய சீப்பு.. இப்படி வகைவகையாக புதிய டிசைன்களில் வாங்குவார்கள். வெளியே புறப்படும்போது தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அவைகள் அத்தனையையும் தோள்பைக்குள் திணித்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது. வெளியே பயணங்களின்போதுதான் அது சுமையாக மாறுவதை உணருவார்கள்.

கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் மடிக்கணினியும் அவசியம் எடுத்து செல்ல வேண்டியதிருக்கிறது. அதோடு தண்ணீர் பாட்டில், புத்தகம், நோட்டு, மதிய உணவு, செல்போன், அலங்கார அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. அதிகமான சுமை தோளை அழுத்தும். அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.

பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும், எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும், தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உடல் சமநிலையை இழக்கும். கனமான கைப்பை வைத்திருப்பவர்கள் சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலி தோன்றும். என்ன காரணத்திற்காக வலி ஏற்படுகிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தேவையற்ற பல பரிசோதனைகளை செய்யவேண்டிய தாகிவிடும்.

தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும். இப்போது நிறைய பாக்கெட்டுகளை கொண்ட சவுகரியமான தோள்பைகள் வந்துவிட்டன. அவைகளை வாங்கி, அது அதற்குரிய இடங்களில் பொருட்களைவைத்தால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் குவிவதையும் தவிர்த்துவிடலாம்.

பெண்கள் கவனிக்க..

தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை:

* பெரிய பட்டை கொண்ட பைகளை தேர்ந்தெடுங்கள்.

* கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். அப்போது தான் உடலை சமநிலைப்படுத்த முடியும்.

* அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும், விரல்களும் மரத்துப் போய்விடக்கூடும். ரத்த ஓட்டம் தடைபடுவதால் அந்த பாதிப்பு தோன்றும். அந்த சமயத்தில் ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

* எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. ‘லைட் வெயிட்’ பைகளை வாங்குங்கள்.
Tags:    

Similar News