லைஃப்ஸ்டைல்
கொரோனா தடுப்பூசி போடும் முன் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

கொரோனா தடுப்பூசி போடும் முன் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2021-06-30 07:07 GMT   |   Update On 2021-06-30 07:07 GMT
கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.
புதுடெல்லி

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி போடுவோருக்கும் சில வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

இதுபற்றிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-

* 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு பிறகு ஆபத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு.

* கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து அதிகரிக்காது.

* கொரோனா தடுப்பூசியின் தன்மை, மதிப்பு, முன்எச்சரிக்கைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் முதலில் முன்கள பணியாளரோ, தடுப்பூசியை செலுத்தும் சுகாதார பணியாளரோ விளக்க வேண்டும்.

* கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. மற்றவர்களைப் போலவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கிறது. பக்கவிளைவுகள் லேசானதுதான். லேசான காய்ச்சல் வரலாம். ஊசி செலுத்திய இடத்தில் வலி வரலாம். 3 நாட்கள் வரை பாதிப்பு இருக்கலாம்.

* மிக அரிதாக 1.5 லட்சம் பேரில் ஒரு கர்ப்பிணிக்கு, தடுப்பூசி போட்ட 20 நாளில் சில முக்கிய அறிகுறிகள்( மூச்சு திணறல், வாந்தி, வயிற்று வலி, கைகால்களை அழுத்தும்போது வலி, மூட்டு வீக்கம், சருமத்தில் சிராய்ப்பு,தொடர் தலைவலி போன்றவை) இருக்கலாம். இதுகுறித்து அவர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

* கர்ப்ப காலத்தில் கொரோனா தாக்கினால், குழந்தையை பிரசவித்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

* கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

- கொரோனா தடுப்பூசி பற்றிய மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்கள பணியாளர்கள் தெரிவிப்பதை எளிதாக்கும் வகையில் கேள்வி பதில் வடிவில் குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News