லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை

Published On 2021-05-06 07:24 GMT   |   Update On 2021-05-06 07:24 GMT
கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் விழிப்புடன் இருக்க அனைவரும் வலியுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் தூங்கும் முறை பற்றிய சில தகவல்களை உங்களோடு இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் ட்ரைமெஸ்டர்

முதல் மூன்று மாதம் - கர்ப்பம் அடைந்து முதல் மூன்று மாதங்கள் கருவின் அளவு சிறியதாக இருந்ததால் படுத்து உறங்க சிரமமின்றி இருந்தது. நான்கு மாதங்கள் தொடங்கியதிலிருந்து முன்புபோல் இயல்பாக படுக்க முடியாது ஏனென்றால் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். நான் சாதாரணமாக குப்புறப்படுத்து தூங்குவது வழக்கம். கர்ப்ப கால தொடக்கத்தில் குப்புற படுக்காமல் தூங்க சிரமப்பட்டேன். குப்புற படுப்பதால் கர்ப்பப் பையில் அழுத்தம் ஏற்படும் அதனால் கருவுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் அதை தவிர்ப்பது சிறந்து. அதே போல் மாதங்கள் கூட கூட அடிக்கடி புரண்டு படுப்பதும் நல்லதல்ல. எழுந்து உட்கார்ந்து திரும்புவதே சிறந்தது.

இரண்டாம் ட்ரைமெஸ்டர்

நான்கு முதல் ஆறு மாதம் - நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும்.
வயிறும் சற்று பெரிதாக இருக்கும். சிலருக்கு மல்லாந்து படுப்பது வழக்கம் கர்ப்ப காலத்தில் படுக்கும் பொழுது கருப்பை ரத்தக்குழாய்களை அழுத்துவதால் மூச்சு திணறல் மற்றும் ரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்புள்ளது. படுக்கும் பொழுது நம்முடைய உடம்பிலுள்ள முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அழுத்தம் உண்டாகும். கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு போதிய இடம் இல்லாமல் தவிக்க வாய்ப்புள்ளது. குழந்தையினுடைய எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும் சமயத்தில் மல்லாந்து படுத்தால் தாயின் குடல் பகுதி மீது அதிக அழுத்தம் ஏற்படும் இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகளும் அசௌகரியமும் உருவாகும்.

மூன்றாம் ட்ரைமெஸ்டர்

ஏழு முதல் ஒன்பது மாதம் - இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் மருத்துவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் குழந்தைக்கு கொடி சுத்தும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் கடைசி மூன்று மாதங்கள் அதிலும் முக்கியமாக 9 ஆம் மாதம் இடதுபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள். அதே போல் மாதங்கள் கூட கூட புரண்டு படுப்பதை தவிர்த்து எழுந்து உட்கார்ந்து மறுபக்கம் திரும்பி படுப்பது தாய் சேய் இருவருக்கும் நல்லது.

சரியான முறை

கர்ப்ப காலத்தில் உறங்குவதற்கு சரியான முறையை அறிந்து கொள்வதற்கான சில குறிப்புகளை காணலாம்.

* கர்ப்பிணிகளுக்கு பக்கவாட்டில் படுப்பது சிறந்த நிலை. அவ்வாறு படுக்கும் பொழுது நமக்கும் சுமை இன்றி கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும் சௌகரியமான இடம் இருக்கும். இடதுபுறம் சாய்ந்து படுப்பது ஏற்றது. ஒரே புறம் படுத்து உறங்கும் பொழுது கை தோள்பட்டை வலி வர  வாய்ப்பு உள்ளது. அதனால் மற்றொருபுறம் திரும்பிப் படுக்கும் பொழுது எழுந்து மீண்டும் மற்றொருபுறம் படுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் திரும்பி படுக்கும் பொழுது எழுந்து திரும்பி படுப்பது  அவசியம். தூக்கத்தில் இது மிகவும் கடினமான செயல் இருப்பினும் இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைக்கு கொடி சுற்றாமல் இருக்கும். அதேபோல் கால்களுக்கிடையில் ஒரு மிருதுவான தலையணையை வைத்து கொள்ளலாம்.

* பக்கவாட்டில் படுத்து உறங்கும் பொழுது வயிற்றுப் பகுதிக்கு அடியில் சப்போர்ட் இருப்பதற்கு ஏற்றார் போல போர்வை போன்ற துணியை வயிற்றுக்கு அடியில் வைத்து சப்போர்ட் கொடுக்கலாம். முதுகிலும் பெரிய தலையணை ஒட்டி உறங்கும் பொழுது ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

* உறக்கத்தில் மல்லாந்து படுத்துவிடுமோ, அல்லது குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று அதிகமாக பயம்கொள்ள வேண்டாம். எப்போதுமே ஒரு விஷயத்தை பழகினால நம்மை அறியாமலேயே தூக்கத்தில் கூட நாம் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுப்போம். நானும் அப்படித்தான். பழக பழக நம்முடைய ஆழ்மனதில் பதிந்துவிடும். மற்றும் இதெல்லாம் நம் குழந்தைக்காக தானே செய்கிறோம் என்று நினைக்கும் போது நாம் இன்னும் விழிப்புணர்வோடு இருப்போம். அதனால் தூங்கும் போது பயம் கொள்ளாமல் கூடுதல் கவனம் வைத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் தானாகவே வரும்.
Tags:    

Similar News