லைஃப்ஸ்டைல்
தாய்மையை தடுக்கும் ஹார்மோன்

தாய்மையை தடுக்கும் ஹார்மோன்

Published On 2021-04-27 07:26 GMT   |   Update On 2021-04-27 07:26 GMT
பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும்-உடல்நிலையில் ஏற்படும் பின்னடைவுகளுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சீரற்ற தன்மை காரணமாக இருக்கிறது.
பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும்-உடல்நிலையில் ஏற்படும் பின்னடைவுகளுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சீரற்ற தன்மை காரணமாக இருக்கிறது. பசியின்மை, வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, இனப்பெருக்க சுழற்சி, பாலியல் செயல்பாடு, உடல் வெப்பநிலை போன்ற பல உடல் செயல்முறைகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு ஹார்மோன்கள் சீராக சுரக்கவேண்டியது அவசியம்.

ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

மனநிலை ஊசலாட்டம்: செரோடோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் மகிழ்ச்சியான உணர்வை அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது மன நிலையில் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக மாதவிடாய் சமயங்களிலும், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களிலும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. வாழ்வியல் முறையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச் சினையை எளிதாக சரிப்படுத்திவிடலாம்.

தேவையற்ற முடி வளர்ச்சி: ஹார்மோன் சமநிலையின்மை செரிமான அமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சீரற்றதன்மை காரணமாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் சீரற்றதன்மை நிலவும்போது குரலில் கரகரப்பு, தேவையற்ற பகுதிகளில் முடி வளர்வது போன்ற ஆண்களின் பண்புகளை வெளிப்படுத்த நேரிடும்.

கருவுறுதலில் கவலை: ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்தால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படக்கூடும். பி.சி.ஓ.எஸ் போன்ற சினைப்பை மற்றும் கருப்பை சார்ந்த சில உடல்நலப் பிரச்சினைகளும் தாய்மையை தடுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இரவு வியர்வை: மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் சில பெண்களுக்கு இரவு நேரங்களில் வியர்வை பிரச்சினை உண்டாகும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். மாத விடாய் சுழற்சியின்போது இயற்கையாகவே ஹார்மோன் செயல்பாடு களில் ஏற்ற இறக்கம் காணப்படும். இதற்கு மனஅமைதியும், மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

தூக்கம்: மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தூக்கமின்மையையும் அனுபவிக்கக்கூடும். கர்ப்ப காலத்திலும் தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். இதற்கு ஹார்மோனில் ஏற்படும் சீரற்றதன்மை காரணமாக இருக்கலாம். இது தூக்க சுழற்சியை தொந்தரவு செய்வதால் மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். அப்போது மனதை அமைதிப்படுத்தும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் உட்கொள்ளலாம்.

தலைவலி: மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், மனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நிறைய பெண்கள் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பெண் களின் உடல்வாகுவை பொறுத்து வலியின் தன்மை மாறுபடும். உணவை பல நேரமாக பங்கிட்டு சாப்பிடுவது, நன்றாக தூங்குவது போன்றவை தலைவலியை போக்க உதவும். பெண் உறுப்பில் ஏற்படும் உலர்வுத்தன்மையும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

எடை அதிகரிப்பு: உடல் எடை அதிகரிப்பு என்பது ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறியாகும். இந்த பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுவது பொதுவானது. தைராய்டு சுரப்பிகளின் குறைவான செயல்பாட்டின் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். அதாவது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தி செய்யப்படும். அதனால் பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) போன்ற கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் உருவாகக்கூடும். அதன் காரணமாக சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் ஏற்படும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை முன்கூட்டியே அனுபவிக்கக்கூடும். உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். முக்கியமாக அடிவயிற்றின் அருகே கொழுப்பு உருவாகும்.

முகப்பரு: ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறிகளில் முகப்பருவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் குறைவாகவும், ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாகவும் இருப்பது நாள்பட்ட முகப்பரு பிரச் சினைக்கு காரணமாக இருக்கலாம். அதுபோலவே கர்ப்பம், மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சருமத்தில் அரிப்பு, வறட்சி போன்ற பிரச் சினைகள் ஏற்படும். தைராய்டு பாதிப்பு கூட சரும பிரச் சினைகளை உண்டாக்கும். ஹார்மோன் சமநிலையின்மையால் நீண்டகால சரும பிரச்சினைகளை எதிர்கொண்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

எலும்பு பலவீனம்: 35 வயதிற்கு பிறகு பெண்களின் முதுகெலும்பில் இருக்கும் கால்சியத்தின் அளவு குறைய தொடங்கும். தாய்ப்பால் கொடுக்கும்போதும் உடலில் இருந்து கால்சியத்தின் அளவு குறையும். தாய்க்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே அதற்கு காரணம். ஈட்ஸ்ரோஜன் அளவுகளில் சமநிலையின்மை ஏற்படுவதும் எலும்புகளை பலவீனமாக்கும். இத்தகைய இழப்புகளை ஈடு செய்வதற்கு போதுமான அளவு கால்சிய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனைபடி மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளலாம்.
Tags:    

Similar News