லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால்...

பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால்...

Published On 2020-12-26 04:46 GMT   |   Update On 2020-12-26 04:46 GMT
பெண்களும், தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து இன்றியமையாதது. உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை ஈடு செய்வதற்கு இரும்பு சத்துதான் பக்கபலமாக இருக்கும். உடலில் இருக்கும் இரும்பு சத்தில் 70 சதவீதம் ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களிலும், மியோகுளோபின் எனப்படும் தசை செல்களிலும் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து மற்ற திசுக்களுக்கு எடுத்து செல்வதற்கு ஹீமோ குளோபின் அவசியம்.

இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்போது ஹீமோ குளோபினின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தசோகை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். உடல் சோர்வு, தலைச்சுற்றல், மூச்சு திணறல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தொடர்ந்து தலைவலி ஏற்படுவது, கூந்தல் வறட்சி, கால்களில் நடுக்கம், பதற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை இரும்பு சத்து குறைபாட்டிற்கான பிற அறிகுறிகளாகும். முடி கொட்டுவது, திடீரென்று சருமம் வெளிர் நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

சரும ஆராய்ச்சி மருத்துவர் மோனிகா பம்ரோ கூறுகையில், “தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாத போது ரத்த சோகை பிரச்சினை தலைதூக்குகிறது. அதன் தாக்கம் சருமத்தில் வெளிப்படும். சரும வறட்சி, அரிப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நகங்கள் உடைவது, வெடிப்பு ஏற்படுவது, உடல் வலுவிழந்து போவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும். முகத்திலும், உடல் முழுவதும் சோர்வு ஏற்படக்கூடும். கருவளையம் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். சருமம், கூந்தல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்” என்கிறார்.

நட்ஸ் வகைகள், பயறு வகைகள், பீன்ஸ், கீரை வகைகள், சிறு தானியங்களை அதிகம் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
Tags:    

Similar News