லைஃப்ஸ்டைல்
குடும்பத்தலைவிகள் 65 வயதை கடக்கும்போது..

குடும்பத்தலைவிகள் 65 வயதை கடக்கும்போது..

Published On 2020-12-24 08:26 GMT   |   Update On 2020-12-24 08:26 GMT
குடும்ப நலன் மீதும், குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ளும் குடும்பத்தலைவிகள் தங்கள் உடல் நலன் மீது போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குடும்ப நலன் மீதும், குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ளும் குடும்பத்தலைவிகள் தங்கள் உடல் நலன் மீது போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் முதுமை பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே ஏராளமான நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். சில நோய்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்வரை வெளிப்படையான அறிகுறிகளை கொண்டிருக்காது.

ஆரம்பக்கட்டத்திலேயே பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துவிட்டால் கடுமையான பக்கவிளைவுகளில் இருந்து தப்பிவிடலாம். வயது, பாலினத்தை பொறுத்து ஒருசில பரிசோதனைகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உடல் நலன் குறித்த தனிப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பராமரித்து வருவதும் முக்கியம். பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய சிலவழக்கமான பரிசோதனைகள் இருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் மார்பக பரிசோதனை மேற்கொள்வது அவசியம். மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட முடியும்.

‘பேப் ஸ்மியர்’ எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தவறாமல் மேற்கொள்வதும் அவசியமானது.

பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது பற்களின் சுகாதாஇரத்தை மேம்படுத்த உதவும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது அவசியமானது. உயரம் மற்றும் உடல் எடை இரண்டும் பி.எம்.ஐ. கணக்கீடு அடிப்படையில் சீராக இருப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

தைராய்டு, நிண நீர், கருப்பை, சருமம் போன்றவற்றை பரிசோதனை செய்யும் வழக்கத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பரிசோதனை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எவ்வளவு விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய ‘லிப்பிட் புரோபைல்’ பரிசோதனை உதவும். இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.

40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்பகம், சருமம், தைராய்டு, கருப்பை, மலக்குடல் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கு உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 50 வயதை கடந்த பெண்கள் மார்பகத்தை பரிசோதிக்கும் மெமோகிராம் பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமானது.

40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரத்த பரிசோதனை மற்றும் கண் பார்வை திறனை கண்டறியும் பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்வதும் நல்லது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிப்பதும் நல்லது.

50 வயதை கடந்த பெண்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது.

65 வயதை கடந்த பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வதும் சிறப்பானது. அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் உடல் எடை, மார்பகம், இரத்த அழுத்தம், தைராய்டு, கருப்பை, நிணநீர், மலக்குடல் போன்ற உறுப்புகள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கு பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காது, பார்வைத்திறன் பரிசோதனை, இரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை பற்றிய பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதும் நல்லது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்த துணைபுரியும்.
Tags:    

Similar News