லைஃப்ஸ்டைல்
கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்

Published On 2020-11-09 07:29 GMT   |   Update On 2020-11-09 07:29 GMT
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும். இதற்கு சூப்பரான வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரம், உதாரணமாக மதிய நேரம் வெளியில் செல்ல வேண்டாம்.

ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி.

சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். நீச்சல் பயிற்சி முறைப்படி கற்றறிந்த கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் அடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவை யில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் அதிக பட்சமான உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.இவ்வாறு கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும்.

கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச் சத்து தேவைப்படும். எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவும் அறிவும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம்.   ஊட்டச்சத்து பொட்டாசிய த்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம்.

வாழைப்பழம், அவகேடோ அத்திப்பழம், லீட்டாஸ், செலரி, கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் இந்த சத்து நிறைந்துள்ளது. கீரை வகையான புதினாவிலும் பொட்டாசியம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காபியில் நிறைந்துள்ள கேஃபைன் சிறு நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும்.

இதனால் உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக மிளகு மற்றும் புதினா கலந்த தேநீரை அருந்தலாம். இது கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் படுக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். நேராகப் படுப்பது அல்லது வலது பக்கமாகப் படுப்பதை விட இடது பக்கமாகப் படுப்பது சிறந்தது. இவ்வாறு படுப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீரான அளவில் இருக்கும். ஆகக் கால் வீக்கமும் குறையும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினம் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாலை வேளை என்று இல்லை வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவ்வப்போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடப்பது நல்லது. இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சரியான அளவில் நடைபெறும். இதன் மூலம் நிச்சயம் கால் வீக்கம் குறையும்.

கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் உணவுகளை யும் சாலையோரங்களில் மலிவான விலையில் கிடைக்கும் துரித உணவு களையும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பும் சேர்த்து இருப்பார்கள். இது கால் வீக்கத்தை அதிகரிக்க செய்து விடும். ஆக இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தையோ அல்லது டப்பையோ எடுத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எப்சம் சால்ட்டைக் கலந்து கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் சில சொட்டுகள் லேவண்டர் ரோசையும் கலந்து கொள்ளலாம். இதில் பெண்கள் தங்கள் கால்களை விட்டுக் கொள்ளலாம். தினம் ஒரு 15 நிமிடங்கள் இதைச் செய்யலாம். இந்த எப்சம் சால்ட் தசை வலிகளை நீக்க உதவும். இது கால் மற்றும் பாதங்களில் உள்ள நச்சுகளையும் கழிவுகளையும் நீக்க வல்லது. ஆர்னிகா எண்ணெயைப் பாதங்கள் மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீர் அடையும்.கால் வீக்கம் வடியும்.
Tags:    

Similar News