லைஃப்ஸ்டைல்
வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது

வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது

Published On 2020-09-03 07:53 GMT   |   Update On 2020-09-03 07:53 GMT
உடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது முந்தைய காலத்தில் சிறுமிகள், ‘விரைவில் வயதுக்கு வந்து பெரிய மனுஷி ஆகவேண்டும்’ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும், இன்றைய சிறுமிகள் ‘வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தங்கள் உடல் வளர்ச்சியை பற்றி அவர்கள் விஞ்ஞானபூர்வமாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் அதற்கான காரணம் என்றும் சொல்கிறார்கள்.

சிறுமிகளின் அம்மாவோ, அக்காவோ, நெருக்கமான உறவுப்பெண்களே மாதவிலக்கு நாட்களில் சில அவஸ்தைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வயிற்றுவலியால் அவதிப்படலாம். அந்த நாட்களில் தங்களது அன்றாட செயல்களை செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்துபோய் காட்சியளிக்கலாம். அதை எல்லாம் பார்க்கும்போது ஒருசில சிறுமிகளுக்கு மாதவிலக்கு பற்றிய எதிர்மறையான எண்ணம் தோன்றுகிறது. ‘பூப்படைந்தால் தாமும் இதுபோன்ற அவஸ்தைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் வயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது’ என்ற எண்ண ஓட்டம் அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி மாதவிலக்கு நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது, அதனை குறிப்பிட்ட கால அளவில் அப்புறப்படுத்தவேண்டியது, அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருப்பது போன்றவைகளும், சிறுமிகளிடம் பூப்படைதல் பற்றிய எதிர்மறை சிந்தனை உருவாக காரணமாக இருக்கிறது.

இந்த எதிர்மறை சிந்தனை சிறுமிகளிடம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது டாக்டர்களின் கருத்து. எதிர்மறை கருத்தை போக்கி, பெண்களின் உடல்வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களின் இயற்கைத்தன்மையை விஞ்ஞானரீதியாக புரியவைப்பதில் தாய்மார்கள் முக்கிய பங்காற்றவேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள். அது பற்றி டாக்டர்களின் விளக்கம்:

ஒருசில பெண்கள் மாதவிலக்கை அசிங்கமானதாகவும், அழுக்கானதாகவும் நினைக்கிறார்கள். ஆனால் மாதவிலக்கு என்பது பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இனப்பெருக்கத்துக்கான பருவத்தை பெண் அடையும்போது, ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் அதற்கான மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் கர்ப்பநிலையை அடையாதபோதுதான், கருப்பையில் இருந்து அவை மாதவிலக்கு உதிரமாக வெளியேறுகிறது. ஒரு பெண்ணின் உடல் இயற்கையான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதற்கு பூப்படைதல் ஒரு முக்கியமான அடையாளமாகும். அதனால் பூப்படைதலை நேர்மறையான சிந்தனையுடன் சிறுமிகள் வரவேற்கவேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் பெண்களின் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும். அதை தொடர்ந்து கருப்பையின் உள்பக்கச் சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன என்டோமெட்ரியம் உருவாகும். ஒருவேளை, அவள் கருத்தரித்து குழந்தை உருவானால், குழந்தை பாதுகாப்பாக வளர்வதற்கான ஏற்பாடுகளை இந்த என்டோமெட்ரியம் படலம் செய்யும்.

இந்த மிருதுவான படலம் தயார் ஆனதும், ஏதாவது ஒருபக்க சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். அது கருக்குழாயை அடையும். அப்போது, பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்தச் சமயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்தால், முட்டையோடு ஆணின் உயிரணு சேர வாய்ப்பு உண்டு. இதுதான் கருத்தரித்தல். கர்ப்பக்காலத்தின் தொடக்கமும் அதுதான்.

ஆணுடன் இணையாதபோது முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையில் என்டோமெட்ரியம் அவசியமற்றதாகிவிடுகிறது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன்விளைவாக, என்டோமெட்ரியம் உடைந்து சிதைந்து, மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேறும். இது மாதந்தோறும் உடலுக்குள் நடக்கும் விந்தையான விஞ்ஞான செயல்பாடாகும். இதுதான் மாதவிலக்கு. இது பெண் பூப்படைந்த பின்பு மாதந்தோறும் தொடரும் நடைமுறையாகும். இதை தாய்மார்கள், மகள் வயதுக்கு வரும் பருவத்தை அடையும்போது சொல்லிக்கொடுக்கவேண்டும்.
Tags:    

Similar News