லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணிகள் கோடைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் வரும்

கர்ப்பிணிகள் கோடைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் வரும்

Published On 2020-06-06 04:16 GMT   |   Update On 2020-06-06 04:16 GMT
கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம் போன்றவை கோடைக்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும்.
கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் இரண்டு பருவநிலைகளை கண்டிப்பாக கடந்துவருவார்கள். ஏற்கனவே உடல் ரீதியில் பல மாற்றங்களை சந்தித்துவரும் இவர்களுக்கு இந்த பருவ மாற்றம் உடலில் வேறு பிரச்சனைகளை கொண்டுவராமல் பார்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக கோடைக் காலங்களில். கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம் போன்றவை இக்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும். இதைத் தவிர்க்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வெண்டும்.இதனால் கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் குழந்தையின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். இது குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.

கோடைக்காலத்தில் வியர்வை வழியாக வெளியேறும் அதிகப்படியான நீரை ஈடு செய்ய உடலுக்கு போதிய நீர்ச்சத்து தேவை. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் நாளை தொடங்குங்கள். ஒவ்வாமையும், குமட்டலும், வாந்திஉணர்வும் இந்தகாலத்தில் சகஜமானது தான். ஆனால் மிதமான சூட்டில் வெந்நீரை குடிக்கும் போது இந்த உணர்வு உண்டாகாது.

வெந்நீருக்கு மாற்றாக பழச்சாறுகள் குடிக்கலாம். அதே நேரம் வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து ஒரு நாள் குடிக்கலாம். மறுநாள் நெல்லிக்காய் சாறு சேர்த்து குடிக்கலாம். இன்னொரு நாள் ஆரஞ்சு சாறு கலந்து குடிக்கலாம். இப்படி தினமும் 4 டம்ளர் பழச்சாறுகள் உடன் அதிகப்படியான நீரும் அவசியம்.

சிறுநீரை அடக்குவது கண்டிப்பாக கூடாது. கர்ப்பக்காலத்தில் கருத்தரித்த நாள் முதல் சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும். தூங்கும் போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரக்கூடும். இதனால் ஆழ்ந்த தூக்கம் என்பது கடினமாக இருக்கும் பலரும் இந்த நேரத்தில் சிறுநீரை கழிக்காமல் அடக்க முயற்சிப்பார்கள்.

நாள் ஒன்றுக்கு 3 லிருந்து 5 முறை வரை சிறுநீர் கழிப்பது போய் 8 முதல் 10 முறையாவது சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும். இதை தவிர்க்கும் போது சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று, சிறுநீரக கற்கள். சிறுநீர் கடுப்பு பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். மேலும் கோடைக்காலத்தில் உடலில் வியர்வை வழியாக வெளியேறும் நீர் ஒருபுறம், சிறுநீர் வழியாக வெளியேறும் நீர் மறுபுறம் என்று உடல் அதிகப்படியான நீரிழப்பை சந்திக்க நேரிடும். அதை ஈடு செய்ய ஒரே வழி. போதுமான நீர் குடிப்பதும், சிறுநீரை அடக்காமல் இருப்பதும் தான்.

கர்ப்பக்காலத்தில் அதிலும் இரண்டாவது ட்ரைமெஸ்டரின் இறுதி மாதங்களில் அதாவது 6 ஆம் மாதம் முதலே பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். குழந்தை வளர வளர வயிற்று தசைகள் தளர்ந்து கூபக தசை மற்றும் இடுப்பு தசைகளில் இறுக்கம் உண்டாவதால் மலச்சிக்கல் இயல்பானது என்றாலும் உணவு பழக்கம் மூலம் அதை தவிர்க்க முடியும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நீர்ச்சத்தும் காரணமாகிறது.

உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் தான் அவை குடலின் இயக்கங்களை சீராக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும். நீர்ச்சத்து இல்லாமல் பற்றாக்குறையாகும் போது மலம் இறுகி விடுகிறது. தொடர்ந்து இந்த பிரச்சனையை சந்திக்கும் போது கர்ப்பிணிகள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் உணவு முறையோடு தினமும் தேவைக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பதும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் மட்டும் அல்லாமல் தினமும் தண்ணீரும் அதிகம் தேவை.

கர்ப்பக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் வாந்தி எடுப்பதும் உங்கள் உடலிலிருக்கும் நீர்ச்சத்தை இழக்க கூடும். இந்த நீர் இழப்பு எல்லா காலங்களிலும் என்றாலும் கூட கோடைக்காலத்தில் இன்னும் அதிகமாக வேகமாக இழப்பை சந்திக்க நேரிடும். இதை உணர்த்தும் அறிகுறிகளாக தொண்டையில் வறட்சி ஏற்படும். தொண்டை உலர்ந்து காணப்படும். சிலருக்கு தலைவலியும் சோர்வும் உண்டாகும். தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் அவை நீர் இழப்பாக இருந்தால் அவரே உறுதி செய்து அதற்கான ஆலோசனைகளை பரிந்துரைப்பார்.

கர்ப்பிணிகள் உடலில் நீர்சத்து குறைபாடில்லாமல் பார்த்துகொள்வது அவர்களது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் பொருந்தும். நீர்ச்சத்து குறைபாடு கர்ப்பிணிகளின் உடலை பலவீனப்படுத்துவதோடு குழந்தையையும் பலவீனப்படுத்தும். கர்ப்பிணிகளின் உடலில் போதிய நீர்ச்சத்து இருந்தால் தான் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும்.

 கோடைக்காலத்தில் நீர்சத்து குறையாமல் பார்ட்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டமும் போதுமான அளவு இருக்கும். அதனால் தான் கர்ப்பக்காலங்களில் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் கோடைக்காலங்களில் இன்னும் சற்று கூடுதலாக என்கிறார்கள்.

தண்ணீரோடு அவ்வபோது இஞ்சி சேர்த்த மோர், இளநீர், பழச்சாறுகளையும் எடுத்துகொள்வதன் மூலம் கோடையில் உடலை நீர்ச்சத்து குறையாமல் காக்கலாம். 
Tags:    

Similar News