லைஃப்ஸ்டைல்
கர்ப்பக்கால அஜீரண கோளாறு

கர்ப்பக்கால அஜீரண கோளாறை தடுக்கும் வழிமுறைகள்

Published On 2020-05-29 04:24 GMT   |   Update On 2020-05-29 04:24 GMT
சில பெண்களுக்கு பேறுகாலம் முழுவதும் கூட அஜீரணக்கோளாறு ஆட்டிபடைக்கிறது. இதை பக்குவமாக கையாண்டால் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபட முடியும்.
கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். ஆனால் உணவு உடலுக்குள் சென்று செரிமானம் ஆவதற்கு முன்பே ஒவ்வாமையால் வாந்தியாக வெளியேறிவிடுகிறது. சில பெண்களுக்கு பேறுகாலம் முழுவதும் கூட அஜீரணக்கோளாறு ஆட்டிபடைக்கிறது. இதை பக்குவமாக கையாண்டால் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபட முடியும். அன்றாட வாழ்க்கை முறை, உணவு முறை, உடலை பழக்கும் முறை என்று ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினாலே எளிதாக அதை தவிர்க்க முடியும். அப்படி செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகள் எப்போதும் திரவ ஆகாரத்தை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். திரவ ஆகாரம் என்பதால் தண்ணீர் மட்டும் தான் அருந்த வேண்டும் என்பதில்லை. நீர் மோர், எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இளநீர் என்று மாறி மாறி எடுத்துகொள்வதன் மூலம் அஜீரணத்தை தவிர்க்க முடியும்.

அதே நேரம் திரவ ஆகாரம் என்று அதிக அளவு காஃபி, டீ, கார்பனேட் பானங்கள், செயற்கை பானங்கள் போன்றவை எல்லாம் உடலுக்கு கேடு தருபவை என்பதோடு அஜீரணக்கோளாறுகளை அதிகமாக்கவே செய்திடும் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள், கர்ப்பக்காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமே என்று அதிக உணவை ஒரே நேரத்தில் திணிப்பது உண்டு. ஆனால் அப்படி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் தாமதம் உண்டாகவே செய்யும். அதற்கு பதிலாக உணவை பிரித்து பல முறை சாப்பிட வேண்டும். மூன்று வேளைக்கு மாற்றாக ஆறு அல்லது ஏழுமுறை உரிய இடைவெளியில் உணவு, பழத்துண்டுகள், காய்கறி சாலட், சுண்டல்வகைகள், சிற்றுண்டி என்று பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் உண்டாகாமால் தவிர்க்க முடியும்.

கர்ப்பகாலத்தில் பிடித்த உணவுகள் பிடிக்காமல் போகலாம். பிடிக்காத உணவுகளை தேடி சாப்பிட தூண்டும். ஆனால் சத்தான உணவுகள் கூட சமயங்களில் ஒவ்வாமையை உண்டு செய்யும்.

அப்படியான உணவு பொருள்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலருக்கு எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள், சில கீரை வகைகள், சில உணவுகள் கூட ஒவ்வாமையை உண்டாக்காலாம். செரிமானக்கோளாறை ஏற்படுத்தலாம். அதனால் செரிமானக்கோளாறு அதிகமாகும் போது நீங்கள் எடுத்துகொண்ட உணவு பொருள்களை யோசியுங்கள். மீண்டும் இது தொடர்ந்தால் அந்த பொருளை பேறுகாலம் முழுவதும் தவிர்ப்பது தான் சிறந்தது.

பழங்கள் செரிமானத்தை எளிதாக்குபவை. அதிகரிக்ககூடியவை. அதனால் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் தினம் ஒன்று எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் போன்று மாதுளை, நெல்லிக்காய் என்று மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். இவை செரிமானத்தை எளிதாக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் வரமால் தடுக்கலாம்.கர்ப்பக்காலம் முழுமையும் தினம் ஒரு பழம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணக்கோளாறையும் தடுக்க முடியும்.

அஜீரணத்தோடு நெஞ்செரிச்சல் என்பதும் வரக்கூடியது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்படியான நெஞ்செரிச்சல் அவஸ்தை உண்டாகும். அதனால் மதிய வேளையில் படுக்கும் போதும் இரவு நேரங்களில் படுக்கும் போதும் ஒருமணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உணவு செரிமானமாகும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலமும் உணவு செரிமானம் எளிதாகும்.

பொதுவாக சாப்பிட்டபிறகு மிதமான நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகும் செரிமானம் ஆகும் வரை கீழே குனிவதையும், கால்களை நீட்டி உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே உணவு சிறுகுடலுக்கு சீராக செல்லும். இரவு நேரங்களில் தலைக்கு சற்று உயரமான தலையணை வைத்து படுப்பதன் மூலம் நெஞ்செரிச்சல், அஜீரனக்கோளாறு தவிர்க்கலாம். 
Tags:    

Similar News