லைஃப்ஸ்டைல்
முதுகுவலி

பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு கடுமையான முதுகுவலி வரக்காரணம்

Published On 2020-04-02 07:23 GMT   |   Update On 2020-04-02 07:23 GMT
சிசேரியனின் போது பெண்களுக்கு முதுகில் போடப்படும் ஊசியால் கடுமையான முதுகு வலி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிசேரியனின் போது முதுகில் போடப்படும் மயக்க ஊசிக்கும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஜவ்வுப் பகுதிகளிலோ தசைகள் மற்றும் எலும்புகளிலோ ஏற்படும் பாதிப்புகள் காரணமாக முதுகுவலி வரலாம். ஆனால் பலர் இப்படித்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது இரண்டுவிதமான மயக்க மருந்துகள் கொடுக்கப்படும்.

இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு வால்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு ‘எபிடியூரல்’ என்கிற மயக்க மருந்து கொடுப்போம். இது முதுகுத் தண்டு வடத்துக்கு வெளியே போடப்படுவது. இந்த மருந்தை `கதீட்டர்’ என்னும் டியூபின் உதவியோடு அறுவை சிகிச்சை முடியும் வரை சிறுகச்சிறுக செலுத்துவோம். இந்த மருந்தால் இஇரத்த அழுத்தம் அதிரடியாக இறங்காது. பக்க விளைவுகளும் ரிஸ்க்கும் குறைவு.

‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பது ஒரே ஊசியாக முதுகுத் தண்டுவடத்தின் உள் பகுதியில் போடப்படுவது. இதில் ரிஸ்க் அதிகம். ஆரோக்கியமானவர்களுக்கு மட்டும்தான் தேவையின் அடிப்படையில் இது கொடுக்கப்படும்.

‘யாருக்கு எந்த வகை மயக்க மருந்து கொடுப்பது’ என்பதை மருத்துவர்களே முடிவுசெய்வார்கள். இந்த இரண்டு மருந்துகளுமே முதுகுவலிக்குக் காரணமாவதில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். அதனால்கூட முதுகுவலி வரலாம்.

பற்றாக்குறையை ஈடுகட்ட கால்சியம் சத்தும் வைட்டமின் டி சத்தும் சேர்ந்த சப்ளிமென்ட்டுகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். முதுகுவலிக்கான முக்கியக் காரணங்களில் எடை அதிகரிப்பும் ஒன்று. பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு எடை அதிகரிக்கும். உடற்பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்குப்பின் பெண்களுக்கு இயல்பிலேயே தசை மற்றும் எலும்புகள் நலிவடையும். ஈஸ்ட்ரோஜென் குறைந்து முதுகெலும்பு பலவீனமடையும். முதுகுவலிக்கு இவையெல்லாம்கூட காரணமாகலாம்.
Tags:    

Similar News