பெண்கள் உலகம்
குறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

குறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

Published On 2019-12-24 08:28 IST   |   Update On 2019-12-24 08:28:00 IST
எடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
குறைப்பிரசவத்திற்கான காரணங்கள்...

‘‘கருவுறுவதற்கு முன்பே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மிகச் சிறிய வயதிலேயே அதாவது 19 வயதுக்கு முன்பே அல்லது மிகத் தாமதமாக 35 வயதுக்குப்பின் கருவுறும் பெண்களுக்கும் இது சாத்தியம்.

அதற்கு அடுத்ததாக, கர்ப்பகாலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோய் முக்கிய காரணியாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பகால சர்க்கரை நோய் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்துவிட்டால், குழந்தையின் எடை அதிகமாகி, முன்கூட்டியே குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில், இந்தப் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் முன்கூட்டியே திறந்துவிடும்.

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய ரத்த அழுத்த நோயும் ஒரு காரணமாகிறது. தாயின் ரத்த அழுத்தம் அதிகமானால் குழந்தையை முன்கூட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. பிரசவ நாளுக்கு 1 வாரத்திலிருந்து 2 வாரத்திற்கு முன்பு மன  அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு 20 சதவீதம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது பணியிடங்களில் சவாலான வேலைகளை பெண்கள் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் வாக்குவாதம், தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டி சூழல் என பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். வீட்டிலும் பல பிரச்னைகள். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அடுத்து உடற்பயிற்சியற்ற வாழ்க்கை, ஆரோக்கியமில்லாத உணவுமுறை, தேவையற்ற பயணங்கள், சுற்றுச்சூழல், தூக்கமின்மை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் இவையெல்லாமும் கூட குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன.’’

குறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

‘‘கருவுறுவதற்கு முன்பே எடையை சரி வர பராமரிப்பது, அம்மை தடுப்பூசி, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்த் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, நெகடிவ் ரத்த வகை உள்ளவர்கள் அதற்கான ஊசி போட்டுக் கொள்வது மற்றும் கர்ப்பகால நீரிழிவு வாய்ப்பு இருக்கிறதா என சோதனை செய்து கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளே பெரும்பாலும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன என்பதால் கருவுற்ற பெண்கள் சரியான உணவு, யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. முடிந்தவரை காற்று மாசு நிறைந்த இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். குறைப்பிரசவம் திடீரென்று வருவதில்லை.

இது ஒரு வாழ்வியல் நோய் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மனதை அமைதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.’’

Similar News