பெண்கள் உலகம்
மாதவிடாய்

மாதவிடாய் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகள்

Published On 2019-10-23 08:43 IST   |   Update On 2019-10-23 08:43:00 IST
உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை. சிலர் சென்ற மாதத்தில் வந்த மாதவிடாய் நாளை நினைவில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் சிலருக்கு அந்த தேதியை ஞாபகம் வைத்துக் கொள்வது சற்று கடினமான காரியம். அதனால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகிறது என்பது குறித்த குழப்பம் இருக்கும். சில மாதங்களில் ஒரு வாரம் முன்கூட்டியே கூட மாதவிடாய் உண்டாகலாம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் தனது மாதவிடாய் சுழற்சி குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம். புதிய கர்ப்பத்தடை முயற்சி மேற்கொள்ளுதல் அல்லது வேறு சில காரணத்தினால் கூட மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு தோன்றலாம். ஆனால் உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து நீங்கள் அடுத்த சில தினங்களில் உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.

உடலின் ஹார்மோன் மாறுபாடு காரணமாக, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு சார்ந்த பொருட்களைத் தேடி சுவைக்கும் உணர்வு அதிகரிக்கும். பொதுவாக அதிகம் இனிப்பு சேர்க்காதவர்கள் கூட சாக்லேட்டை தேடி பிடித்து சாப்பிடும் எண்ணம் கொள்வார்கள். மாதவிடாய் சுழற்சி முழுவதும் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சமச்சீரான உணவு அட்டவணையைப் பின்பற்றும் பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் எளிதில் சமாளிக்கும்படியான நாட்களாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் மற்றும் மாதவிடாய் காலம் முழுவதும் அதிகரித்த சோர்வு காணப்படும். உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் காரணமாக உடல் இயல்பை விட அதிகமாக சோர்வாக உணரலாம். இது இயற்கையானது தான். இந்த சூழ்நிலையை அமைதியாக எதிர்கொண்டு, அதிகமான ஓய்வு எடுத்து கொள்ளலாம். உங்களை நீங்களே அவசரப்படுத்தி எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம்.

சிலருக்கு பாதங்களில் வீக்கம் உண்டாகலாம். சில பெண்கள் தங்கள் அடிவயிறு, மார்பகம் போன்ற சில இடங்களில் வீக்கத்தை உணரலாம். சிலருக்கு கைகள், முகம், கால்கள் போன்றவையும் வீக்கமாக இருக்கும். உடலில் அதிக திரவம் தங்குவதால் இந்த நிலை உண்டாகும். ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உடலில் வீக்கம் ஏற்படும்போது படுத்துக் கொண்டே இருக்காமல் உடலை அசைத்துக் கொண்டிருப்பதால் இந்த வீக்கம் குறையலாம். அதனால் நடைபயிற்சி, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் வீக்கம் குறையும்.

Similar News