லைஃப்ஸ்டைல்
பெண்களே புற்றுநோயை வெல்லலாம்

பெண்களே புற்றுநோயை வெல்லலாம்

Published On 2019-10-21 02:30 GMT   |   Update On 2019-10-21 02:30 GMT
மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.
புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனசுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். வாசிப்பவர் வயதானவர் என்றால் கேட்கவே வேண்டாம், வயிற்றில் புளியை கரைக்கும். இயற்கையோடு இயைந்த நம் பாரம்பரிய வாழ்வியலை மறந்து, செயற்கை தன்மை நிரம்பிய மேற்கத்திய கலாசாரங்கள் நமக்குள் புகுந்து கொள்ள தொடங்கியதில் இருந்தே பல தொற்றா நோய்கள் நமக்கு நெருக்கடி கொடுக்கின்றன.

அந்த நோய் கூட்டத்தில் வி.ஐ.பி. வரிசையில் புற்றுநோய் உட்கார்ந்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அநேகரும் நினைப்பதுபோல் புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை. புற்றுநோயில் வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்; அதில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய தினம் தவிர்க்க முடியாத நோயாகி வருகிறது புற்றுநோய்! 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கோ, எவருக்கோ வந்து கொண்டிருந்த புற்றுநோய் இப்போது ஜலதோஷம் பிடிப்பதுபோல் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைமைக்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் எந்த புற்றுநோய் என்பதை தெரிந்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால், இன்றைய நவீன மருத்துவத்தில் அதை எதிர்கொள்வது எளிது என்பதும் உறுதியாகி உள்ளது.

உடலில் கட்டி தோன்றிவிட்டாலே அது புற்றுநோய்தான் என்று அவசரப்பட்டு முடிவு கட்ட வேண்டாம். எல்லாக் கட்டிகளும் புற்று நோய்க் கட்டிகள் அல்ல! ஆபத்தானதும் அல்ல! விதிவிலக்கும் உண்டு. BR-CA 1 -2 மரபணுக்களில் குறைபாடு காணப்பட்டால், பெண்களுக்கு மார்பகத்தில் புற்று நோய் வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், சினைப்பையில் புற்றுநோய் வருவதற்கு 50 சதவீத வாய்ப்பும் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வருமுன் காக்க மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையையும், மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையையும் மேற்கொண்டார். புற்றுநோய் வரலாற்றில் உலக அளவில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு இது. இந்தியாவில் புற்றுநோயை வென்றவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (நுரையீரல் புற்றுநோய்), நடிகைகள் கவுதமி, மனீஷா கொய்ராலா (மார்பக புற்றுநோய்) என பலரும் இடம் பெற்றுள்ளனர்.

நாட்டில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் ஏற்படுகிறது. 10 லட்சம் பேர் ஏதாவது ஒரு புற்றுநோயால் இறக்கின்றனர். 1½ லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 72 ஆயிரம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் இறக்கின்றனர். 1 லட்சத்து 25 ஆயிரம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

85 ஆயிரம் ஆண்களுக்கும், 35 ஆயிரம் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. 100 பேரில் 13 பேர் மட்டுமே புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வருகின்றனர். மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுபவை. இவற்றை நிச்சயம் தடுக்க முடியும்.

Tags:    

Similar News