பெண்கள் உலகம்
கர்ப்பகால சர்க்கரை நோய்

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு இதுதான் காரணம்

Published On 2019-08-29 08:52 IST   |   Update On 2019-08-29 08:52:00 IST
வைட்டமின் டி குறைபாடுள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு.
உலக அளவில் ஏழு பெண்களில் ஒருவருக்கு ஏற்படும் இந்தக் கர்ப்ப கால சர்க்கரைநோய் ஏற்படுவதாக தெரிவிக்கின்றன புள்ளிவிவரங்கள். பொதுவாக, கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படும். கர்ப்பகால சர்க்கரைநோயை `ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' (Gestational Diabetes) என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். சிலருக்கு தாயின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, கருச்சிதைவு, பிறவி ஊனம், குறைப் பிரசவம், நிறைமாத சிசு இறப்பு, அதிக எடையுள்ள குழந்தை பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு நேரடியான பாதிப்பையும் கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்தக் கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படுத்துகிறது.

கர்ப்பகால சர்க்கரை நோய் வருவதற்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜின் ஜியா மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஜின் ஜியா பேசுகையில், ``107 கர்ப்பிணிகளிடம்  கர்ப்பம் தரித்த பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் வைட்டமின் டி குறைபாட்டால் சர்க்கரைநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே வைட்டமின் டி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படாமல் முன்னதாகவே தடுக்க முடியும்" என்கிறார்.

Similar News