லைஃப்ஸ்டைல்
உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை

உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை

Published On 2019-08-23 04:00 GMT   |   Update On 2019-08-23 04:00 GMT
உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.
நவம்பர் 11: சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் இறந்தனர். தரமற்ற மருந்து மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 6: கோவை மாநகர அரசு மருத்துவமனையில் கலைவாணி என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போதிய படுக்கை வசதி, சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படையில் சிகிச்சை என்பது உயிரைக் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதானே ஒழிய, உயிரைப் பறிப்பது அல்ல. மேற்கூறியவை போலவே, இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சம்பவங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெளியில் தெரியாமல் வேறு காரணங்களை கூறி மறைக்கப்பட்டிருக்கின்றன.

ஊக்கத்தொகை கொடுக்கிறோம், அரசு சலுகைகள் கிடைக்கும்’ என்றெல்லாம் ஆவலைத் தூண்டி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வரவழைக்கும் அரசு நிர்வாகம் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா? இல்லவே இல்லை. அப்படி மேற்கொண்டிருப்பின் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பின்றி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.



“பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணையும்போதுதான் சிசு உருவாகிறது. அவற்றை இணையாமல் தடுப்பதுதான் கருத்தடையின் அடிப்படை. கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றுள் நிரந்தரமான வழிதான் கருத்தடை அறுவை சிகிச்சை. இச்சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் இணைகிற கரு இணை குழாய் துண்டிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் மயக்குனர்தான் இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறத் தூய்மையும் முக்கியம். சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஒவ்வொரு முறையும் நன்கு கழுவி, Cidex திரவத்தின் மூலம் 15 நிமிடங்கள் நுண்கிருமிகளை நீக்குதல் (Sterilization) செய்யப்பட வேண்டும். ரத்தக்கொதிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகையில் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர் தயாராக இருக்க வேண்டும்.

மயக்கம் தெளிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் வரை, முறையாக பராமரிக்க பணியாளர்கள் வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது ஒரு நாளாவது ஓய்வெடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால், தரமான மருந்துகள் பயன்படுத்தப்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிக மிக அரிது. உயிரின் மதிப்பும் மகத்துவமும் தெரியாதவர்கள் மருத்துவர்களே அல்ல. ஓர் உயிர் மீதான அக்கறையோடு செயல்பட்டாலே இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கமலா செல்வராஜ்.

கமலா செல்வராஜ்.
Tags:    

Similar News