லைஃப்ஸ்டைல்
பெண்களின் உடற்பயிற்சிக்கு ஏற்படும் தடைகள்

பெண்களின் உடற்பயிற்சிக்கு ஏற்படும் தடைகள்

Published On 2019-07-30 02:59 GMT   |   Update On 2019-07-30 02:59 GMT
சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது.
கிராமங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள். நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவதில்லை.

முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுபவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் 43 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது. உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் அனைத்து செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.

வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும். ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தாயின் பொறுப்பு. இவற்றுக்கான வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது. இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது. எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள்.
Tags:    

Similar News