பெண்கள் உலகம்

இரவுப் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா?

Published On 2018-04-24 09:14 IST   |   Update On 2018-04-24 09:14:00 IST
நீண்ட நாள்களுக்கு இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.
முடி, நகம் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார்  ஒரு லட்சம் பெண்கள் ஆளாகிறார்கள். சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில்தான் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நீண்ட நாள்களுக்கு இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

நம் உடலில் தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துவது மெலடோனின் (Melatonin) ஹார்மோன். இந்த ஹார்மோன் இருட்டுச் சூழலில் மட்டுமே சுரக்கும். இரவில் விளக்கு வெளிச்சத்தில் பணிபுரியும்போது, உடலுக்குத் தேவையான மெலடோனின் ஹார்மோன் கிடைக்காமல் போகும். மேலும், வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதால், வைட்டமின் டி-யும் குறையும். இதனால் உடல்நலன் பாதிக்கப்படும்; மார்பகப் புற்றுநோயும் ஏற்படலாம்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone), ‘ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) போன்ற பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் தவறான நேரத்தில், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகச் சுரப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்திருக்கிறது. இதனால்தான் 'நைட் ஷிஃப்ட்' வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



இப்போது ஆண்களைவிட, பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகம், வாய், கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பைப் புற்றுநோய்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதுதான் மார்பகப் புற்றுநோயின்  முக்கிய அறிகுறி. எனவே, பெண்கள் தங்களின் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மார்பகத்தில் சிறு கட்டி ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பகப் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம். இதற்கு அறுவைசிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார்மோன் தெரபி என பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும்.

Similar News