பெண்கள் உலகம்

பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்?

Published On 2018-04-16 08:20 IST   |   Update On 2018-04-16 08:20:00 IST
பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது பல நேரங்களில் அருகில் படுத்திருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடும். இப்படி பற்களைக் கடிப்பவர்களுக்கு அப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்ற உணர்வே தோன்றுவதில்லை.

தூக்கத்தில் பற்களைக் கடிப்பதை மருத்துவ உலகு ‘ப்ருக்ஸிஸம்’ என்கிறது. இது மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகும்போதுதான் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள். வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டால், அவை தூக்கத்தின் போது இப்படி வெளிப்படும் என்கிறார்கள் உளவியலாளர் கள்.

பொதுவாக டீன்ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள்தான் இந்தப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்திற்கு தேர்வு பயம் முக்கிய காரணமாக இருக்கிறது. அதற்கடுத்து காதல் விவகாரமும் சேர்ந்து கொள்கிறது. பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்டால் தீர்ப்பதும் சுலபம். பற்கள் தொடர்ந்து இப்படி நறநறவென்று அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். எந்தவொரு இனிப்பான உணவையும், சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களையும் சாப்பிட முடியாது. வெகுநாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்தால் தாடையின் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து போய்விடும். தாடை எலும்பை மண்டை ஓட்டோடு இணைந்திருக்கும் மூட்டுப் பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாக்கும்.

தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்’ என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். படுக்கப்போகும்போது மட்டும் இதை பற்களில் பொருத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் கீழ் தாடையும் மேல் தாடையும் ஒட்டாமல், உரசாமல் தடுக்கலாம். ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல. மன அழுத்தத்துக்கான காரணத்தை தேடி, அதைச் சரி செய்த பிறகே இந்தப் பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். இதற்கு நல்ல மனநல ஆலோசகரின் அறிவுரை, யோகா, தியானம் போன்ற ஆன்மிக வழிமுறைகளை நாடலாம். நல்ல பயன் தரும். நிச்சய தீர்வு கிடைக்கும்.

சாப்ட் ஸ்பிளின்ட்

Similar News