லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணிகள் கோடை காலத்தில் கவனிக்க வேண்டியவை

Published On 2018-03-15 03:37 GMT   |   Update On 2018-03-15 03:37 GMT
கர்ப்பிணி பெண்கள் வெயில் காலத்தில் மிகவும் சோர்வடைந்து போவார்கள். காரணம் வெயில் காலத்தில் வியர்வையினால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும்.
கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை காரணமாக வாந்தி அதிகமாக இருக்கும். தண்ணீர் குடித்தால் கூட சிலருக்கு வாந்தி வரும். குமட்டல் இருந்து கொண்டே இருக்கலாம். சரியாக சாப்பிடப் பிடிக்காது. இதனால் ஆகாரம் உட்கொள்வது குறைந்து போகும். இந்த சமயத்தில் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதிலும் கோடையில் இன்னும் சிரமம். வெயிலின் தாக்கம் காரணமாக மிகவும் சோர்வடைந்து போவார்கள். காரணம் வெயில் காலத்தில் வியர்வையினால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும்.

வெயில் காலத்தில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. தண்ணீர் தாகம் அதிகம் இருந்தாலும் குமட்டல், வாய்க்கசப்பின் காரணமாக அவர்களுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காது. ஆனால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணிப் பெண்கள் ஒருநாளுக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இளநீர், பழச்சாறுகள் நிறைய குடிக்க வேண்டும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடலாம். பழச்சாறுகள் எனும்போது சிலர் குளிர்பானங்கள் வாங்கிக் குடிப்பார்கள். அது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதில் சர்க்கரை அதிகம். இரசாயனப் பொருட்களும் கலந்து இருக்கும். அதனால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்க வேண்டும். வீட்டில் தயாரித்துக் குடிப்பது இன்னும் நல்லது.



எலுமிச்சம் பழ ஜூஸ் வாய்க்கசப்பு இருப்பவர்களுக்கு இதமாக இருக்கும். எலுமிச்சைச் சாறில் சர்க்கரையுடன், உப்பும் கலந்து அருந்துவது நல்லது. கோடையில் கிடைக்கிறது என்று மாம்பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டாம். மாம்பழம் வயிற்றுவலி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஏற்கெனவே நீர்ச்சத்து உடலில் குறைவாக இருக்கும் நேரத்தில் இந்தப் பிரச்சனையும் சேர்ந்து கொண்டால் சிரமப்பட வேண்டியதிருக்கும்.

வெயில் காலத்தில் ஏற்படும் மற்றொரு பிரச்சினை நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று (Urinary tract infection). இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்கள் தான் குழந்தையின் கண், மூக்கு, இதயம் என எல்லா உடல் உறுப்புகள் வளரும் காலம். அதனால் இந்த சமயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று தடுக்க வழிகள் :

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
2. எலுமிச்சம் சாற்றில் இருக்கும் அமிலத்திற்குக் கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பதால் எலுமிச்சைச்சாறு குடிப்பது மிக நல்லது.
3. வேலைக்குப் போகிற பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் சிறுநீர் கழிக்கச் சிரமப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது. வீட்டிலிருக்கும் போதாவது அதிகபட்சமான தண்ணீர் குடிப்பது நல்லது.
Tags:    

Similar News