லைஃப்ஸ்டைல்

பெண்களின் வயதுக்கு ஏற்ற வனப்பு தரும் உணவுகள்

Published On 2018-02-08 04:00 GMT   |   Update On 2018-02-08 04:00 GMT
நாற்பது வயது பருவம் பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் உணவு மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் மட்டுமே ஆயுள் வரை நிம்மதியாக வாழ முடியும்.
‘இந்தியர்களின் உணவுப் பழக்கம் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்விக்கு, வெளிநாட்டை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்தியல் நிபுணர் ஒருவர், ‘அவர்களுக்கு 15 வயதில் ஒரு உணவை ரொம்ப பிடித்துவிட்டால், 45 வயதிலும் அதைதான் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்’ என்று பதிலளித்தார். இது உண்மைதான். இந்தியர்களில் பலர் சிறுவயதில் விரும்பியதைதான், கடைசி காலம் வரை ருசிக்கிறார்கள்.

தனக்கு பிடித்த உணவை சாப்பிட எல்லோருக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் வயதுக்கும், பருவத்திற்கும், உடல் அமைப்புக்கும் தக்கபடி சாப்பிடப்படும் உணவுகளே உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தை தரும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை கைவிட்டு, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும்.

ஏன்என்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் ‘மனோபாஸ்’ என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம். அப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்குதக்கபடி உணவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஆரோக்கியத்தை பாதுகாத்தால்தான் அழகாகவும் தோன்ற முடியும்.

நாற்பது வயது என்பது பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஒரு வேகத்தடை போன்றது. அதுவரை விரும்பிய உணவுகளை எல்லாம் விதவிதமாக சாப்பிட்டாலும், அந்த வேகத்தடை பருவத்தில் உணவில் முழு அளவில் பெண்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். ஏன்என்றால் அந்த பருவத்தில் ஹார்மோன்களில் உருவாகும் ஏற்றத்தாழ்வுகள் உடலுக்குள் பெருங்கலாட்டாவை உருவாக்கும்.

அந்த கலாட்டா காலத்தில் கவனமின்றி சாப்பிட்டால் உடல் எடை கிடுகிடுவென ஏறிவிடும். உதாரணத்திற்கு, ஒரு பெண்ணுக்கு 40-45 வயதில் ஏற்படும் இந்த ஹார்மோன் கலாட்டா, அந்த பெண்ணுக்கு இனிப்பு உணவுகள் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தலாம். அதனால் அவர் இனிப்பை விரும்பி, அதிக அளவில் உண்பார். அது அவரது உடல் எடையை அதிகரிக்கவைத்துவிடும். எனவே நாற்பது வயதுக்கு மேல் பெண்கள் அனைவரும் உடல் எடையில் கவனமாக இருங்கள். ஒரு கிலோ அதிகரித்தாலும், ஒரு கிலோ குறைந்தாலும் உடனடியாக அதில் கவனம் செலுத்துங்கள்.



இந்திய தாய்மார்கள் பொதுவாகவே தங்கள் உடல் ஆரோக்கியத்தில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் தங்கள் மகள் பூப்படையும்போது அவளுக்கு சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்கி, அவர்களை வளர்த்து ஆளாக்க பெரும்முனைப்புக் காட்டுவார்கள். அதே நேரத்தில், ‘மகள் பூப்படையும்போது அவள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்று, தான் மனோபாஸ் நிலையை அடையும்போதும் தன் உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதற்கு தகுந்தபடி தானும் உணவுகள் உண்ணவேண்டும்’என்ற உண்மையை உணர்ந்துகொள்ள அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் 40 முதல் 50 வயது பருவத்தில் பெரும்பாலான பெண்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. அதனால் அடுத்த பத்தாண்டுகளில் அவர்கள் நோயாளிகளாகிவிடுகிறார்கள்.

மனோபாஸ் காலகட்டம் உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது பெண்களுக்கு அதுவரை இருந்த உற்சாகம் குறைந்ததுபோல் ஆகிவிடும். சோர்வும், எரிச்சலும், கவனச்சிதறலும் உருவாகும். அதுவரை சரியான உணவு சாப்பிட்டு, முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள்கூட அப்போது அவைகளில் அலட்சியம் காட்டுவார்கள். அந்த அலட்சியம் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அலட்சியமே பிற்காலத்தில் உடல் குண்டாவதற்கும், இதய நோய் போன்றவை தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகிறது.

மனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அதனால் எலும்புகளில் தேய்மானம் தோன்றும். அது மட்டுமின்றி அவ்வப்போது தசைவலி, தசைப் பிடிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் கொழுப்பு நீக்கிய பால், தயிர், பன்னீர், கீரை வகைகள் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நாற்பது வயது காலகட்டத்தில் பெருமளவு பெண்கள் தங்கள் அடிவயிறு கனத்து போவது போன்ற உணர்வு ஏற்படுவதாக சொல்கிறார்கள். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால்தான் இந்த நிலை ஏற்படுகிறது என்றாலும், உணவுகள் மூலம் இந்த பிரச்சினையின் வீரியத்தை குறைக்கலாம். அதற்காக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். ஆப்பிள், காலிபிளவர், கேரட் போன்றவை பொருத்தமானது.

நாற்பது வயது பருவம் பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் உணவு மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் மட்டுமே ஆயுள் வரை நிம்மதியாக வாழ முடியும்.

கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ் (உணவியல் ஆலோசகர்), சென்னை.
Tags:    

Similar News