லைஃப்ஸ்டைல்

35 வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் வரக்காரணங்கள்

Published On 2018-01-16 04:34 GMT   |   Update On 2018-01-16 04:34 GMT
35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு காரணம், எலும்பு தேய்மானம்.
35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்சனை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிடன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.

எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.
Tags:    

Similar News