பெண்கள் உலகம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள்

Published On 2018-01-02 13:11 IST   |   Update On 2018-01-02 13:11:00 IST
இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. 

பரம்பரைத் தன்மை, பணிச்சுமை, அடிக்கடி இடம் மாறுதல், ஊர் மாறுதல், குடும்பத்தில் வறுமை, குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், பாலியல் தொல்லைகள், பெற்றோருடன் அல்லது புகுந்த வீட்டில் ஒட்டுதல் இல்லாதது, தம்பதிகளுக்குள் பிணக்கு, கணவரின் இரண்டாம் திருமணம், குடிப்பழக்கம், மனைவியை அடித்தல், திட்டுதல் போன்ற தீயநடத்தைகளின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், ஒவ்வாத குடும்பச் சூழல், குடும்பத்திலும் சமூகத்திலும் ஆதரவற்ற நிலை, உறவுமுறை சிக்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வு, நெருங்கிய உறவுகளில் அல்லது நட்பில் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிரிவுகள், பண இழப்பு, பணி இழப்பு, முதல் பிரசவ பயம், சென்ற பிரசவத்தில் ஏற்பட்ட கொடிய அனுபவங்கள், உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்றவற்றால் மனம் பாதிக்கப்படுவது இயல்பு. 

* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது அவசியம். வீட்டுச்சமையலே நல்லது. 

* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம். 

* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும். 



* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். 

* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும். 

* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம்     இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். 

* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம். 

Similar News