பெண்கள் உலகம்

பெண்கள் பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க இயற்கை வழிகள்

Published On 2017-11-21 11:27 IST   |   Update On 2017-11-21 11:27:00 IST
கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடுவது குறித்து, நிறைய பெண்களுக்கு கவலை இருக்கிறது. இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கும் வழிகளை பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில், சராசரியாக, ஏழு முதல், 15 கிலோ உடல் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின், தாய்க்கு போதிய கவனிப்பு கிடைப்பதில்லை. அடிக்கடி தாய்ப்பால் தர வேண்டியிருப்பதால், தாய்க்கு போதிய துாக்கமும் இருக்காது. குழந்தை பிறந்தவுடன், தானாகவே ஐந்து முதல் ஆறு கிலோ உடல் எடை குறைந்துவிடும்.

டெலிவரிக்குப் பின் உணவு ரொம்ப முக்கியம். காரத்திற்கு பதில் மிளகு, சுத்தமான பசு நெய், உணவில் சேர்த்து சாப்பிடலாம். அதிக கொழுப்பு சேர்க்கக் கூடாது. பால் சுரப்பிற்கு உதவும் பூண்டு, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்திய சாப்பாடு என, செய்து தருவர். அது, இந்த சமயத்தில் மிகவும் நல்லது. காய்கறி, பழங்கள், பால் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; அது துாங்கும் நேரத்தில் தான் துாங்க முடியும் என்பதால், நிறைய பெண்கள், ஆறு மாதங்கள் கழித்து, உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம் என, விட்டு விடுவர். இது தவறு. நார்மல் டெலிவரி என்றால், 10 நாட்கள் கழித்து, சிசேரியன் என்றால், ஒரு மாதம் கழிந்தவுடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.



வட மாநில குடும்பங்களில், பசு நெய் அல்லது கோதுமை வைத்து மசாஜ் செய்வர். இது மிகவும் நல்லது. குறைந்தது, வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்யலாம். சிசேரியன் டெலிவரிக்குப் பின் உடற்பயிற்சி செய்தால், ஹெர்னியா வருமா என, நிறைய பெண்கள் கேட்கின்றனர். வயிற்றை அதிகம் சிரமப்படுத்தாமல், உடற்பயிற்சி செய்யலாம்.

பிரசவத்திற்கு பின் பழைய உடல் எடைக்கு திரும்புவதற்கு, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம். தினமும் குறைந்தது, 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். ஒரு நாளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

மூச்சுப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்றவற்றை செய்யலாம். பிரசவத்திற்கு பின், முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாவிட்டால், கர்ப்ப காலத்தில் அதிகரித்த, உடல் எடையை குறைப்பது சிரமம். ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பும் தனித் தன்மையானது. எனவே, உங்கள் டாக்டரின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருத்தமான வழிகளை பின்பற்றினால், நிச்சயம், அதிகரித்த எடையை குறைக்க முடியும்.

Similar News