லைஃப்ஸ்டைல்

பெண்களே நாப்கின் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜியை அறிந்து கொள்ளுங்கள்

Published On 2017-10-09 04:05 GMT   |   Update On 2017-10-09 04:05 GMT
நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜியை அறிந்து கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் 12 சதவீதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவீதப் பெண்களில், 23 சதவீதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை. 65 சதவீதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

இவை ஒரு பக்கம் இருக்கட்டும், நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜியை அறிந்து கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும்.

அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது.



சிலர் பாலிமர் ஜெல்லுக்குப் பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருட்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பேடுகளை மாற்றிவிட வேண்டும்.

நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News