லைஃப்ஸ்டைல்

40 வயதை கடந்த பெண்களுக்கு உண்டாகும் தலைவலியும்.. தைராய்டும்..

Published On 2017-06-20 04:44 GMT   |   Update On 2017-06-20 04:44 GMT
பெரும்பாலான பெண்களை தலை வலி பிரச்சினை ஆட்கொள்ளும். சரியான வேளைக்கு சாப்பிடாததாலும் ஒவ்வாமை பிரச்சினையினாலும் தலைவலி தோன்றக்கூடும்.
40 வயதை கடந்த பெண்கள் உடல் எடை விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை மெல்ல தலை தூக்கும். அதுவே பின்னாளில் பலவிதமான வியாதிகள் தோன்றுவதற்கு வழிவகை செய்துவிடும்.

உடல் பருமன் பிரச்சினைக்கு கொழுப்பின் அளவுதான் முதன்மை காரணமாக அமைகிறது. மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து புரதச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள், பயறு வகைகள், முழுதானியங்களை உட்கொண்டு வருவதும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு எடை அதிகரிப்புதான் மூல காரணமாக அமையும். ஆதலால் கொழுப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்து வர வேண்டும். அதற்கு தக்கபடி சீரான உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருவது அவசியம். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் அன்றாட வாழ்க்கை முறையாக்கிக் கொள்ள வேண்டும்.



40 வயதை கடந்த பெண்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். 40 வயதை கடக்கும் பெண்கள் கண் நோய் பாதிப்புக்கும் ஆளாக நேரிடும். வெள்ளெழுத்து, கண் அழுத்த நோய் போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும். ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்து வருவது நல்லது.

பெரும்பாலான பெண்களை தலை வலி பிரச்சினை ஆட்கொள்ளும். பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்குபவை. சரியான வேளைக்கு சாப்பிடாததாலும் ஒவ்வாமை பிரச்சினையினாலும் தலைவலி தோன்றக்கூடும். இவை தற்காலிகமானவை. அதேவேளையில் தொடர்ச்சியாக தலைவலி ஏற்பட்டாலோ, அடிக்கடி தலைவலி வந்து கொண்டிருந்தாலோ, மருத்துவரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.

அதிலும் எதிர்பாராத வேளையில் திடீரென்று அதிக வலியுடன் தலை பாரமானாலோ, அந்த சமயத்தில் பார்வையில் மாற்றம் ஏற்பட்டாலோ உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தைராய்டு பிரச்சினையும் பெண்களின் உடல்நிலையை பாதிக்கும். அதிக சோர்வு, மறதி, உடல் எடை அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, தூக்கமின்மை, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகளை தைராய்டு ஏற்படுத்தும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மீள்வது எளிது.
Tags:    

Similar News