லைஃப்ஸ்டைல்

பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்

Published On 2017-05-08 04:53 GMT   |   Update On 2017-05-08 04:53 GMT
ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
அலுவலகத்தில், ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 338 ஆண்-பெண்களிடம் சர்வதேச அளவில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிட அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. மனித வள மேம்பாட்டுத்துறையில் பணிபுரியும் 56 சதவீத பெண்கள் காரண, காரியத்தோடு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 26 சதவீதம் பெண்கள் காரணமே இல்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.



மேற்பார்வையிடுவது தொடர்பான பணிகளில் உள்ள 10 சதவீத பெண்கள், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்தை உணருகின்றனர். சேவை மற்றும் உற்பத்தி துறையில் உள்ள 8 சதவீத பெண்களுக்கு கூடுதல் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும், நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.

பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர். மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
Tags:    

Similar News