லைஃப்ஸ்டைல்

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்

Published On 2017-02-24 06:15 GMT   |   Update On 2017-02-24 06:15 GMT
பிரசவ வலி என்பது பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள்.
இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

“பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது.

ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாதது,அவசியமானதும்கூட!



சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல. சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது.

இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருப்போம். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்வோம்.

Similar News