பெண்கள் உலகம்

பெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்

Published On 2016-11-05 07:51 IST   |   Update On 2016-11-05 07:51:00 IST
மீன் உணவுகளில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.
அசைவ உணவு வகைகளில் அதிக நன்மை தருவதாகத் திகழ்பவை, மீன்கள்.

குறிப்பாக, எண்ணெய்ச் சத்துள்ள மீன்களில் உள்ள முழுமைபெறாத ஒமேகா 3 பேட்டி ஆசிட், நம் உடம்பில் கொழுப்புச் சேராமல் பாதுகாக்கிறது.

ஒரு வேளை மீன் சாப்பிடுவது இரண்டு வேளை உணவுக்குச் சமமானது என்று கூறத்தக்க வகையில் அதில் சத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமாக புரதம், வைட்டமின்கள் ஏ, டி மற்றும் பி, இரும்பு, அயோடின், செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அரிதான தனிமச் சத்துகளும் உள்ளன.

பெண்கள் உடல் வளர்ச்சிக்கு மீன் உணவு அவசியம். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அரிதான அயோடின் சத்து மீன்களில் கிடைக்கிறது. குழந்தைப் பிறப்புக்கு பிறகும் தேவையான பால் சுரக்க மீன்கள் சிறந்த உணவாக உள்ளன.

மீன்கள், மற்ற அசைவ உணவுகளைவிட குறைந்த கலோரியை கொண்ட புரதத்தைப் பெற்றிருப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

நுண்சத்துகளும் மீன்வகைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. ரத்தத்திற்கு தேவையான நுண்சத்து, எலும்புக்கு தேவையான கால்சியம் போன்றவை தாவர உணவுகளைவிட மீன்களில் சிறப்பான வகையில் உடலுக்கு கிடைக்கின்றன.

இதய நோயாளிகள் குறைவான அளவில் ஒழுங்கான இடைவெளியில் மீன் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு உயிர் அபாயத்தை கூடியவரை தவிர்க்கலாம்.

காரணம், மீனில் அதிகமாக உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், ஈகோசெபென்டனாயிக் அமிலம், டொகொசஹெக்சோனிக் அமிலம் போன்ற சத்துகள் மாரடைப்புக்கான ரத்தக்குழாய் படிவுகளைக் கரைக்க வல்லவை. அதனால், மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Similar News