பெண்கள் உலகம்

நான்ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு

Published On 2016-09-13 08:10 IST   |   Update On 2016-09-13 08:10:00 IST
நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளை அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

Similar News