லைஃப்ஸ்டைல்

இந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்

Published On 2016-09-09 05:04 GMT   |   Update On 2016-09-09 05:04 GMT
மாதவிடாய் சரிவர வராததற்கு காரணங்கள் இவைதான் என குறிப்பிடும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
மாதவிடாய் 28- 30 நாட்களுக்குள் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென பொருள். மாதவிடாய் வரும்போது உங்களுக்கு உடல் அசதி, கால் வலி, தசை வலி வருகிறதே என கவலைப்படாதீர்கள்.

மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. உங்கள் சீரற்ற மாதவிடாய்க்கு கீழே சொல்பவைகளும் காரணமாக இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாதவிடாய் தோன்றலாம்.

தைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.

கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

மன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும். அதிலொன்று சீரற்ற மாதவிடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.

போதிய தூக்கம் இல்லாமல் போனாலோ, அல்லது ஒழுங்கு முறையில்லாமல், தாமதமாக தூங்கச் செய்வது ஹார்மோனை பாதிக்கும். குறிப்பாக நைட் ஷிஃப்ட் முறையில் இரவில் வேலை செய்து, பகலில் தூங்குபவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் வருவது நடக்கிறது.

வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே பயப்படத் தேவையில்லை.

Similar News