பெண்கள் உலகம்

பெண்களுக்கு வாதத்தால் வரும் மார்பக வலியும்.... இயற்கைத் தீர்வுகளும்...

Published On 2023-01-17 05:00 GMT   |   Update On 2023-01-17 05:00 GMT
  • மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.
  • மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம்.

பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம். எனவே வாதத்தை குறைக்க எளிமையான ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். அதனை மார்பகத்தின் மேலேயும் பூசி வரலாம். அவ்வப்போது ஆமணக்கு எண்ணெயை தேக்கரண்டி அளவு உள்ளுக்கும் குடிக்க வாதம் குறைந்து வலி குறையும். சிறிது சமைக்கவும் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள அனைவரின் வாதத்தையும் குறைத்து உடலை கெடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

வாதத்தை தூண்டும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் தோய்ந்த உணவுகளை தவிர்த்து, லேசான, எளிதில் சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் அதிக நார்ச்சத்துக்களை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதும் அவசியம். மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.

இதனால் மார்பகவலி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீரில் உள்ள மெத்தில்சேந்தின் எனும் வேதிப்பொருள் மாதவிடாயின் போது மார்பகவலியை அதிகரிப்பதாக உள்ளது. இன்றைய வாழ்வியலில் காபி, டீ-க்கு அடிமையாகிவிட்ட பல பெண்கள் இதை அவசியம் தெரிந்துகொண்டு இயற்கை பானங்களை நாடுவது நலம் பயக்கும்.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News