பெண்கள் உலகம்

மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது...

Published On 2022-09-15 07:00 GMT   |   Update On 2022-09-15 07:00 GMT
  • இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
  • மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும்.

எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.

கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது.

குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.

வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.

கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.

Tags:    

Similar News