லைஃப்ஸ்டைல்
முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

Published On 2021-06-26 06:19 GMT   |   Update On 2021-06-26 06:19 GMT
முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
முடி கருகருவென அடர்த்தியாக நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு. சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும். இதை கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன் பொறாமைப்படுவ்தும் உண்டு. உதாரணமாக நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் பாப் கட்டிங் செய்தாலோ அல்லது முடியின் அளவை குறைத்துக் கொண்டாலோ அது பற்றி ஊரே பேசும். அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உண்டு.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களின் தலைமுடியில்  பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.

உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.

இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.

கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.

தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும். உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
Tags:    

Similar News