லைஃப்ஸ்டைல்
‘பட்டு’க்கு பெருமை சேர்க்கும் ‘பனாரஸ்’ புடவைகள்

‘பட்டு’க்கு பெருமை சேர்க்கும் ‘பனாரஸ்’ புடவைகள்

Published On 2021-05-27 06:19 GMT   |   Update On 2021-05-27 06:19 GMT
இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ‘பனாரஸ்’ புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ‘பனாரஸ்’ புடவைகளும் குறிப்பிடத்தக்கவை. இவை பட்டு நூலால் நெய்யப்பட்டு ஜரிகை வேலைப்பாடுகளால் அழகுற டிசைன்கள் செய்யப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு டிசைனர் புடவைகள் போல காட்சியளிக்கும். வாரணாசி என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான். இந்த பகுதியின் புவிசார் குறியீடும் இதற்கு கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.

இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய திருமணங்களிலும் பனாரஸ் புடவைக்கு மவுசு கூடியிருக்கிறது. தன் மகளை பனாரஸ் புடவை உடுத்தி திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான தாய்மார்களின் கனவாக இருக்கிறது. அதுபோலவே பல தாய்மார்களின் கனவை நிஜமாக்கிய பெருமை இந்த பனாரஸ் புடவைகளுக்கு உண்டு.

பெண்களுக்கு புடவை போல் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை. திருமணம் போன்ற எந்தவொரு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தாலும் அவர்களின் முதல் விருப்ப தேர்வு பட்டுப்புடவையாகத்தான் இருக்கும். எந்த புடவையை உடுத்தலாம் என்ற சிந்தனையிலேயே தங்களிடம் இருக்கும் அனைத்து புடவைகளையும் பார்த்து ரசித்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடு வார்கள். பெண்களை மன மகிழ்ச்சியில் ஆழ்த்துவது எது என்றால் அது புடவையாகத்தான் இருக்கும். அதிலும் பனாரஸ் புடவை பல பெண்களுக்கு இஷ்ட தெய்வம் போன்றது. ‘‘வாரணாசிக்கு பெருமை தரும் விஷயங்கள் பல இருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது பனாரஸ் புடவைகள்தான்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் பனாரஸ் புடவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பரம்பரை பரம்பரையாக பனாரஸ் புடவை தயாரிப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறர்கள். தற்போது இதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும் பனாரஸ் புடவைக்கான மவுசு குறையவில்லை. பண்டைய காலத்தில் அரசர் குடும்பத்தினரின் தேவைக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இந்த பனாரஸ் புடவைகள் இன்று அனைவரின் தேவைக்கு ஏற்றவிதமாகவும், விரும்பும் டிசைன்களுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுகின்றன.

பலதரப்பட்ட மக்களும் பனாரஸ் புடவைகளை விரும்பி வாங்குவதால், அதன் தேவை அதிகமாகிவிட்டது. அதனால் குறைந்த விலையிலும் பனாரஸ் புடவைகளை தயார் செய்கிறார்கள். ஆனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அசல் ஜரிகை கொண்ட பனாரஸ் புடவைகளே பயன்படுத்தப்படுகிறது. காலங்களை கடந்து பேசப்படும் நினைவு பரிசு போல் விலைமதிப்பற்றதாக விளங்கு வதால், இதன் விலையை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பனாரஸ் புடவையில் இடம் பெறும் ஜரிகைகள் பார்ப்பதற்கு பளபளப்பாக ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், அசல் ஜரிகைகள் வெகு காலம் பொலிவு மங்காமல் காட்சியளிக்கும். அதற்கு காரணம் இதற்கு பயன்படுத்தப்படும் பட்டு நூல் தனிச்சிறப்பு மிக்கது.

வெகுகாலமாக சீனாவில் இருந்து இந்த பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது பெங்களூருவில் தயாராகி வருகிறது. பெரும்பாலும் இந்த புடவை கைகளாலேயே நெய்யப்படுகிறது. நுட்பமான கலை நுணுக்கத்துடனும், அழகிய டிசைன்களுடனும் தயார் செய்யப்படுகிறது. ஒரு புடவையை தயார் செய்வதற்கு மூன்று பேர் 30 நாட்கள் கூட பணி புரிவார்கள். வாரணாசி தெருக்களில் பனாரஸ் புடவை நெசவு செய்பவர்களை பார்க்கலாம்.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் பனாரஸ் புடவையை விரும்பி அணிகிறார்கள். ஹேமமாலினி, ரேகா போன்றோர் சினிமா நிகழ்ச்சிகளில் பனாரஸ் புடவையில் தோன்றுவார்கள். பத்மாவதி படத்தின் வெற்றி விழாவில் தீபிகா படுகோனே பனாரஸ் புடவை அணிந்து வந்தார். அவருக்கு நடிகை ரேகா பச்சை நிற பனாரஸ் புடவையை பரிசாக வழங்கினார். ‘‘புடவைகளில் எனக்கு பிடித்தமானது பனாரஸ்தான். நான் எப்போதும் அதை தான் உடுத்துவேன். மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் செய்வேன்’’ என்கிறார், ரேகா.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமானது பனாரஸ் புடவைகள்தான். ‘பனாரஸ் புடவை உடுத்துவதற்கு எளிதாக இருக்கும். அழகான தோற்றத்தை தரும்’ என்று கூறுவார். இதில் நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய மறைவுக்கு பிறகு, அவர் உடலுக்கு பனாரஸ் புடவை போர்த்தப்பட்டது. தீபிகா படுகோனே, அனுஷ்கா, சோனம் கபூர் போன்றோர் திருமணத்தின்போது பனாரஸ் புடவைதான் அணிந்திருந்தார்கள். வித்யாபாலன், ஐஸ்வர்யாராய் விரும்பி அணிவதும் பனாரஸ் புடவைதான். பாலிவுட் நட்சத்திரங்களுக்காகவே பனாரஸ் புடவைகள் பிரத்யேகமாக தயார் செய்யப்படுவதுண்டு. அப்படி தயாரிக்கப்படும் புடவைகளை ஆல்பம் போட்டு தயாரிப்பாளர்கள் வைத்திருப்பார்கள். வித்யாபாலன் புடவை, ஐஸ்வர்யா ராய் புடவை என பனாரஸ் புடவைக்கு தனி பெயர்களும் இருக்கின்றன. பாலிவுட் திருமணங்களில் பனாரஸ் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

பனாரஸ் என்பது ஒரு ஊரின் பெயராக அறியப்பட்டாலும் அது முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க டிசைன்களை குறிப்பிடுவதாகும். முகலாய காலத்தில் வடிவமைக்கப்பட்ட டிசைன்கள் பனாரஸ் புடவைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரிமம் பெற்ற இந்த டிசைன்களை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.

பனாரஸ் புடவையை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்து பார்ப்போம்.

* பனாரஸ் புடவைகளை தயார் செய்வதற்கு வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் விலையும் அதிகமாகத்தான் இருக்கும். குறைந்த விலையில் பனாரஸ் புடவைகளை வாங்க முடியாது.

* கைவேலை நிறைந்த ஒரிஜினல் பனாரஸ் புடவைகளை தொட்டு பார்த்தாலே தெரிந்துவிடும். டிசைன்கள் வழவழப்பாக இருந்தால் அது இயந்திரத்தில் நெய்யப்பட்டதாக இருக்கும். ஜரிகை நூல்கள் மேலும், கீழுமாக இருந்தால் அது கைவேலைப்பாடுகளால் தயார் செய்யப்பட்டதாகும். ஒரிஜினல் ஜரிகைகளை கைகளால்தான் டிசைன்களாக வடிவமைக்க முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் ஒருசில பணிகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.

* பனாரஸ் புடவையில் பட்டாம்பூச்சி வடிவத்தில் ‘சில்க் மார்க்’ போடப்பட்டிருக்கும். முந்தானை டிசைன்கள் ஆரம்பிக்கும் இடத்தில் கொஞ்சம் இடம் விட்டு டிசைன்கள் தொடங்கும்.
Tags:    

Similar News