லைஃப்ஸ்டைல்
அழகான ஆபரணங்கள் கூறும் ஆரோக்கிய காரணங்கள்

அழகான ஆபரணங்கள் கூறும் ஆரோக்கிய காரணங்கள்

Published On 2021-04-30 06:36 GMT   |   Update On 2021-04-30 06:36 GMT
பெண்கள் விழாக்கள், பண்டிகைகளுக்கு நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.
தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பல மரபுகளைக் கொண்டுள்ள நாடு என்ற கண்ணோட்டத்திலேயே இந்த உகம் முழுவதும் உள்ள மக்களால் இந்தியாவானது பார்க்கப்படுகிறது. இந்தியாவை அடையாளம் காண அதன் வாழ்க்கை முறை, ஆடைகள், உணவு, மொழிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஆபரணங்களும் ஒரு காரணமாகும்.

இந்திய ஆபரணங்களானவை பாரம்பரியம் மிக்க ஆபரணங்கள், நவீன காலத்திய பலவிதமான வடிவமைப்பு மற்றும் பாணியைக் கொண்டுள்ள ஆபரணங்களாகும். இந்தியப் பெண்கள் விழாக்கள், பண்டிகைகள் மற்றும் சடங்குகள் என அனைத்திற்குமே நகைகளை அணிவதை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர்கள் நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.

நாம் ஏன் நகைகளை அணிந்து கொள்கிறோம் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? அறிவியல் ரீதியாக நிரூபணமாகாவிட்டாலும் மருத்துவ மற்றும் மன ரீதியாக நகைகள் அணிவதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.

காதணிகள்: காதுகளில் கம்மல்களை அணிந்து கொள்வதை ஆண், பெண் இருபாலருமே விரும்புகிறார்கள். பெண்கள் தோடுகள், தொங்கட்டான்கள், ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள் போன்ற வெவ்வேறு காதணிகளை அணிகிறார்கள். ஒரு காதில் மட்டும் தோடுகள் மற்றும் தொங்கட்டான்களை அணிந்து கொள்வது இன்றைய ஆண்மகன்களிடையே பிரபலமாக உள்ளது. சிலர் இரண்டு காதுகளிலும் கம்மல்களை அணிந்து கொள்கிறார்கள்.

காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம், மூளை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன. இளவயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும், பெண்களின் மாதவிலக்கானது எந்தத் தடையுமின்றி ஆரோக்கியமானதாக இருக்குமென்றும், உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறதென்றும் வேதங்களில் குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மூக்குத்திகள்: பெரும்பாலான இந்தியப் பெண்களின் மூக்கை அலங்கரிக்கும் மூக்குத்தியானது இந்தி மொழியில் நாத் அல்லது நாத்னி என்று அழைக்கப்படுகின்றது. வடஇந்தியப் பெண்கள் இடது மூக்கிலும், தென்னிந்திய பெண்கள் வலது மூக்கிலும் மூக்குத்தியை அணிந்து கொள்கிறார்கள். மூச்சு விடுவதைச் சீராக்குதல், காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற மருத்துவ காரணங்களை மூக்கு குத்துவதால் ஏற்படும் நன்மைகளாகக் கூறுகின்றார்கள்.

வளையல்கள்: வட்ட வடிவில் பெண்களின் கைககளை அலங்கரிக்கும் வளையல்கள் குறைந்தபட்சமாக ஒன்றிலிருந்து அதிகபட்சமாக டசன் கணக்கில் அணியப்படுகின்றன. கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூறும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையல்கள் அணிவதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இந்தியப் பெண்கள் இரண்டு கைககளிலும் வளையல்கள் அணிவதற்கு இதுவும் ஒரு காரணமாக நம்பப்படுகின்றது.

மோதிரங்கள்: ஆண், பெண் இருவருமே விரல்களில் மோதிரங்கள் அணிவதைப் பார்க்க முடியும். நம் உடலின் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவையாகும். நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விரலில் உலோகத்தால் செய்யப்படும் மோதிரங்களை அணிவதால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது.

மாங்கல்யம்: திருமணத்தின் போது ஆண்கள், பெண்களின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டுவது இந்தியர்களிடையே வழக்கத்தில் உள்ள நிகழ்வாகும். மாங்கல்யமானது இதயத்திற்கு மேலே இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகின்றது. இந்தியத் திருமணங்களில் முக்கிய சடங்காக மாங்கல்யம் அணிவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

கால் கொலுசுகள்: பெரும்பாலானவர்கள் வெள்ளியிலான கொலுசுகளையும், சிலர் தங்கத்தினாலான கொலுசுகளையும் அணிகிறார்கள். கணுக்கால்களில் அணியப்படும் கொலுசுகள் நடக்கும்பொழுது ஒலியை ஏற்படுத்துகின்றன. வெள்ளியானது ஒருநல்ல ஆற்றலை நம் உடலுக்குள் கடத்துகின்றது. குழந்தைகளின் கால்களில் அணியப்படும் கொலுசிலிருந்து எழும் ஒலியானது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் எச்சரிக்கை மணியாகவும் விளங்குகிறது.

மெட்டி: கால் விரல்களில் திருமணத்தின் அடையாளமாக பெண்கள் இவற்றை அணிகிறார்கள். கால் பாதத்தின் இரண்டாவது விரல்களில் பெரும்பாலும் மெட்டியானது அணியப்படுகின்றது. மெட்டியானது மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக்கி கருத்தரிக்கும் செயல்முறைக்கு உதவுகின்றது.

நெத்திச்சுட்டி: பெண்களின் முன் நெற்றியை அலங்கரிக்கும் சுட்டிகள் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுவதாக நம்பப்படுகின்றது.

ஒட்டியாணம்: கர்தானி, கமர்பத் என்று அழைக்கப்படும் ஒட்டியாணங்கள் பெண்களின் இடுப்பை அலங்கரிக்கும் ஆபரணமாகும். வெள்ளியில் அணியப்படும் ஒட்டியாணங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகின்றது.

வங்கிகள்: முழங்கைகளின் மேல் பகுதிகளில் உள்ள தசையை இறுக்கிப் பிடித்து வங்கிகள் அணியப்படுகின்றன. இவை கைகளின் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு உடலின் எதிர்ப்பு சக்தியை சரியான அளவில் உருவாக்குவதற்கும் உதவுகின்றது. முன்பு பிரபலமாக இருந்த இந்த நகையானது இன்றைய பெண்களின் நாகரீக நகைகளில் ஒன்றாகி விட்டது.
Tags:    

Similar News