லைஃப்ஸ்டைல்
கடலைப்பருப்பு மசாலா வறுவல்

கடைகளில் விற்கும் கடலைப்பருப்பு மசாலா வறுவலை வீட்டிலேயே செய்யலாம் வாங்க

Published On 2021-02-12 09:30 GMT   |   Update On 2021-02-12 09:30 GMT
கடைகளில், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் கடலைப்பருப்பு மசாலா வறுவல் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ். வீட்டிலேயே சுலபமான முறையில் கடலைப் பருப்பு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் உங்களுக்கு எந்த அளவிற்கு கடலைப்பருப்பு வேண்டுமோ, அதை எடுத்து, இரண்டு முறை தண்ணீரில் கழுவி, அதன் பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி நான்கிலிருந்து, ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் பரவலாக போட்டு, ஃபேன் காற்றில் ஈரத்தன்மை போகும் அளவிற்கு காயவைத்தால் போதும். கடலைப்பருப்பில், சுத்தமாக ஈரப்பதம் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தால் மேலே ஒரு காட்டன் துணியை போட்டு, நன்றாக துடைத்து எடுத்துவிடுங்கள். சீக்கிரமே காய்ந்துவிடும்.

அதன் பின்பு, கடாயில் எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக கடலைப்பருப்பை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். முதலில் கடலைப்பருப்பை எண்ணெயில் போட்டதும் சடசட வென்று, பொரிய ஆரம்பிக்கும்போது, பபுள்ஸ் வர ஆரம்பிக்கும். அதன்பின்பு கடலைப்பருப்பு சிவக்க, சிவக்க பபுல்ஸ் அடங்கி, சிடசிடப்பு அடங்கும்.

மொத்தமாக சிடசிடப்பு அடங்கிய பின்பு, கடலைப்பருப்பு மொத்தமும் எண்ணெயின் மேல் மிதக்க ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் கடலைப்பருப்பை எண்ணெயிலிருந்து எடுத்து, ஒரு வடிகட்டியில் போட்டு எண்ணெயை நன்றாக வடிய வைத்து விடவேண்டும். கடலைப்பருப்பை சிவப்பு நிறமாக சிவக்க வைக்க வேண்டாம். எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்த உடனே, எடுத்து விட்டால் நல்ல சுவை கிடைக்கும்.

இறுதியாக கடலைப்பருப்பை, பொரித்த அதே எண்ணெயில், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். 4 பல் பூண்டை நைத்து, அதே எண்ணெயில் போட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்போடு, வறுத்த கறிவேப்பிலை, வறுத்தெடுத்த பூண்டு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தனி மிளகாய் தூள், சேர்த்து நன்றாக கலக்கி, நன்றாக ஆற வைத்த பின்பு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தீர்கள் என்றால் 5 நாட்கள் வரைக்கும் கூட வைத்து சாப்பிடலாம்.
Tags:    

Similar News