லைஃப்ஸ்டைல்
ஊட்டி வர்க்கி

தனி சுவை கொண்ட ஊட்டி வர்க்கியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க

Published On 2021-01-27 09:30 GMT   |   Update On 2021-01-27 09:30 GMT
வர்க்கி சுற்றுலா நகரமான ஊட்டியின் பாரம்பரிய உணவு பொருளாக திகழ்ந்து வருகிறது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வர்க்கி தயாரிப்பதற்கு மூலப்பொருளாக மைதா மாவு உள்ளது. அதனுடன் சர்க்கரை, உப்பு, எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வர்க்கிக்கு புளிப்பு வர ஈஸ்ட் சேர்க்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ரவை, மைதா மாவு மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் மாவா மூலம் வர்க்கி தயாரிக்கப்படுகிறது. ஊட்டியில் தயார் செய்யப்படும் வர்க்கிகள் அனைத்தும் மரத்தால் ஆன மேஜைகளில் தான் கலவை செய்து தயாரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டி வர்க்கிக்கு எப்போதுமே தனி சுவை என்ற பெயர் உள்ளது.

தேவையான பொருட்கள்

மைதா -   2 கப்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
டால்டா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை

மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுவதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.

மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து  மாவில் ஊற்றி பிசையவும்.

மாவு, எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும்.  தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில்  மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும்.

அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும். அவனை (Oven) அதன் அதிகபட்ச  வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும்.

இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20  முதல் 30 நிமிடம் வேக விடவும்.

வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.

வீட்டிலேயே  ஈஸ்ட்

தேவையான பொருட்கள்


மைதா - கால் கப்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை

இவை  அனைத்தும் நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு  வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவை நாண், ரொட்டி, குல்ச்சா என்று  உபயோகிக்கலாம். ஈஸ்ட் ஒவ்வொரு பேக்கரியிலும் ஒவ்வொரு முறையில்  தயாரிப்பதால், இங்கே பொதுவான முறை தரப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News