லைஃப்ஸ்டைல்
திருநெல்வேலி அல்வா

வீட்டிலேயே திருநெல்வேலி அல்வா செய்யலாம் வாங்க

Published On 2020-12-18 09:33 GMT   |   Update On 2020-12-18 09:33 GMT
திருநெல்வேலி அல்வா என்ற பெயரை கேட்டாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இன்று இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1 1/2 கப் ( வெள்ளை )
முந்திரி பருப்பு - 12
பசு நெய் - 3/4 கப்

செய்முறை :

சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

கோமை நன்றாக ஊறியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.

அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும்.

இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.

அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும்.

முந்திரி பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து கொள்ளவும்.

ஒரு வடசட்டியில் 1/2 கப் சர்க்கரையை கொட்டி அதில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு தீயில் கிளறி கொண்டே இருந்தால் சர்க்கரை உருகி கொஞ்சம் கெட்டியாகி சிறிது நேரத்தில் சர்க்கரை நிறம் மாற தொடங்கும் ( பிரவுன் நிறம் ) அடுப்பு சிம்மில் அல்லது சிறுதீயில் இருப்பது மிக அவசியம்.

சர்க்கரை கரைசல் இப்பொழுது தங்க நிறத்தில் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். மெதுவாக 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் இல்லையெனில் வெடித்து சிதறி மேலே எல்லாம் விழும். சர்க்கரை கரைசல் முழுவதுமாக கரைந்ததும் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்துகோங்க.

அந்த கோல்டன் பிரவுன் கரைசலை கிளறி கொண்டே இருந்தால் அதை கொஞ்சம் எடுத்து நமது ஆள்காட்டி விரல் மற்றும் நமது கட்டை வரலில் தொட்டு எடுத்தால் ஜவ்வு மிட்டாய் போல் அல்லது ஊசி போன மெதுவடை போல் ஒரு மெல்லிய நூல் வரும் அதுதான் கம்பி பதம். இது வந்தவுடன் கோதுமை பாலை மெதுவாக சர்க்கரை கரைசலில் ஊற்றி கொள்ளவும்.

இதை அனைத்தையும் சிறுதீயில் மட்டுமே செய்ய வேண்டும். கோதுமை பாலை சர்க்கரை கரைசலில் ஊற்றியவுடன் கிளறி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் கோதுமை பால் வெந்ததும் மறுபடியும் கோல்டன் பிரவுன் கலர் மாறிவிடும்.

இப்பொழுது இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக 1 மேஜைக்கரண்டி நெய்யை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கரைசலை கிளறி கொண்டே இருக்கவும் கிளறுவதை நிறுத்த கூடாது. இந்த கரைசல் ஊற்றும் நெய்யை உறிந்து கொண்டே இருக்கவும்.

ஒரு பக்குவத்துல இந்த கரைசல் நெய்யை உறிஞ்சாமல் பாத்திரத்தின் ஓரங்களில் நிற்கும் இந்த சமயத்தில் நெய் ஊற்றுவதை நிறுத்தி கொள்ளவும். இப்பொழுது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும். கரைசலை கிளறி கொண்டே இருக்கவும். (முதலில் கிளறும் சமயத்துல கரண்டியில் ஓட்டி கொள்ளும்.)

பாத்திரத்துல அல்வா ஓட்டாமல் வரும் அந்த சமயத்துல அல்வாவின் நிறம் மாறும். அல்வாவின் கலவையில் சின்ன சின்ன சின்னதாக வெள்ளை நிறம் முட்டைகள் அல்லது புள்ளிகள் தோன்றும். இந்த சமயத்தில் அல்வா கிளறும் கரண்டியில் ஓட்டி கொள்ளாமல் வரும். இது தான் சரியான பக்குவம். இந்த பக்குவத்துல அல்வா கலவையை நெய் தடவிய ஒரு அகன்ற ஃட்ரேவில் கொட்டி கொள்ளவும். பிறகு ஆறவைத்து பரிமாறவும்.

குறிப்பு:

கோதுமை மற்றும் சர்க்கரையின் சதவீதம் 1 : 3 அதாவது கோதுமை அரை கப் என்றால் ஒன்று மற்றும் அரை கப் சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News