லைஃப்ஸ்டைல்
மட்டன் தால்சா

அருமையான மட்டன் தால்சா செய்வது

Published On 2019-10-14 08:32 GMT   |   Update On 2019-10-14 08:32 GMT
காய்கறிகள், மட்டன் சேர்த்து செய்யும் இந்த மட்டன் தால்சா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மட்டன் - கால் கிலோ,
துவரம் பருப்பு - கால் கிலோ,
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
மல்லி தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம் பழ அளவு,
பூண்டு - 20 பல்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் - அரை மூடி,
வாழைக்காய், கெட்டியான மாங்காய், கத்திரிக்காய், தக்காளி - தலா ஒன்று,
பெரிய முருங்கைக்காய் - 2,
சின்ன வெங்காயம் - 4,
பட்டை - 2
கிராம்பு - 3,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிதளவு,
நெய் - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.

கழுவிய மட்டனை குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

துவரம் பருப்பைக் கழுவி, 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக விட்டு எடுத்து வைக்கவும்.

(வாழைக்காயையும், மாங்காவையும் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு வேக விடவும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் உரித்து, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

தேங்காயைத் துருவி, தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி... காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி, தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் வெந்த துவரம் பருப்பு, வேக வைத்த மட்டன், காய்கறியை ஒவ்வொன்றாக எடுத்து இதில் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கி விடவும்.

இத்துடன், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும், புளிக்கரைசலை ஊற்றவும்.

மீண்டும் கொதி வந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தேங்காய் விழுதை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கலக்கி விட்டு, எல்லாம் சேர்த்து கொதித்ததும் அடிபிடிக்காமல் கிளறி, இறக்கவும்.

சூப்பரான மட்டன் தால்சா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News