லைஃப்ஸ்டைல்

சாதத்திற்கு அருமையான மட்டன் சொதி

Published On 2018-04-16 09:44 GMT   |   Update On 2018-04-16 09:44 GMT
மட்டன் சொதி தோசை, இட்லி, இடியாப்பம், சாதம், சாப்பத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த மட்டன் சொதி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மட்டன் - 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) - 1 கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 10 கிராம்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மட்டன், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும்.

வெளியில் எடுத்த மட்டனை கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

தனியே மற்றொரு கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும்.

லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).

சூப்பரான மட்டன் சொதி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News