பொது மருத்துவம்

மாரடைப்பை தடுக்க மன அழுத்தத்தை குறைப்போம்

Published On 2023-02-25 13:22 IST   |   Update On 2023-02-25 13:22:00 IST
  • காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு நாளைக்கு 6 கிராம் அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக்.

மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

மாரடைப்பை கண்டறிய

இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.

ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி

ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி.

பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை?

இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன?

இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாரடைப்பை தடுக்க என்ன செய்வது?

மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

Dr. கிரிஷ்தீபக் MD, DM.,FNB இதய மருத்துவர், ஷிபா மருத்துவமனை 9442139292

Tags:    

Similar News