பொது மருத்துவம்
இந்தியாவின் பாரம்பரிய கோடைகால பானங்கள்

இந்தியாவின் பாரம்பரிய கோடைகால பானங்கள்

Published On 2022-05-20 08:41 GMT   |   Update On 2022-05-20 08:41 GMT
காலமாற்றத்துக்கு ஏற்ப மாறுபட்ட சுவைகளில் குளிர் பானங்கள் நடைமுறைக்கு வந்தாலும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான பானங்கள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன.
இந்தியாவின் பல பகுதிகளில் கோடை காலம் தொடங்கிவிட்டது. குளிர்ச்சியான, ஈரப்பதமான காலநிலையில் இருந்து விடுபட்டு வெப்பமான சூழலுக்கு மாறும்போது அதற்கேற்ற பானங்களை பருகுவது அவசியமானது. உலகின் முதல் குளிர்பானமாக சர்பத் கருதப்படுகிறது. பூக்கள், பழங்கள் மற்றும் சர்க்கரை கலந்த இந்த கலவை, இந்தியாவில் முகலாய ஆட்சி காலத்தின்போது பயன்பாட்டுக்கு வந்தது. காலமாற்றத்துக்கு ஏற்ப மாறுபட்ட சுவைகளில் குளிர் பானங்கள் நடைமுறைக்கு வந்தாலும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான பானங்கள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

பாப்ரி பியோல்:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புகழ்பெற்ற இந்த பானம் வட இந்திய பகுதிகளிலும் பிரபலமானது. துளசி விதைகள் அல்லது சப்ஜா விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் பண்டைய காலம் முதலே புழக்கத்தில் இருந்து வருகிறது. முகலாய பேரரசர் பாபர் தான் இந்த பானத்தை இப்பகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பாப்ரி பியோல் பானமானது பால், தண்ணீர், துளசி விதைகள், தேங்காய் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது வட்டார மொழியில்,‘கான் சர்பத்’ என்றும் அழைக்கப்படுகிறது, கான் என்பது விலைமதிப்பற்ற நகைகள் என்று பொருள்படும். அதற்கேற்ப விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது ஒளி ஊடுருவக்கூடிய முத்துக்கள் போல் மிளிரும்.

சோல் ஹடி:

இதுவும் தனித்துவமான பானமாகும். இதனை சூடாகவோ அல்லது அறை வெப்பநிலையிலோ உட்கொள்ளலாம். இந்த பானம் தேங்காய்ப்பால், கோகம் சிரப், மிளகாய், சீரகம், கடுகு போன்ற மசாலாப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் படுகிறது. மிதமான இனிப்பு மற்றும் காரம் கலந்த இந்த பானம் மஹாராஷ்டிராவில் விரும்பி பருகப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் காரமான உணவை உட்கொள்ள விரும்புபவர்களுக்கு சோல் ஹடி சிறந்த தேர்வாக விளங்கு கிறது. இது ஆரோக்கியத்திற்கும், ஆன்மாவிற்கும் நலம் சேர்க்கும் என்றும் கருதப்படுகிறது.

கோந்தோராஜ் கோல்:

கோடை காலத்தில் பலரும் விரும்பி பருகும் பானமாக மோர் விளங்குகிறது. மேற்கு வங்காளத்திற்கு சென்றால் மாறுபட்ட ருசியுடன் மோரை பருகலாம். கோந்தோராஜ் கோல் என்று அழைக்கப்படும் இந்த பானத்தில் தயிர், கருப்பு உப்பு, சர்க்கரை, குளிர்ந்த நீர், கரும் பச்சை நிற எலுமிச்சை காயில் இருந்து எடுக்கப்படும் சாறு ஆகியவை கலந்திருக்கும். கோடைக்காலம் இதை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் என்றாலும், அதன் சுவை காரணமாக ஆண்டு முழுவதும் அடிக்கடி உட்கொள்ளப்படுகிறது.

சுவாக்:

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் பல்வேறு பகுதியில் இந்த பானம் அதிகம் ருசிக்கப்படுகிறது. அரிசி நீரை புளிக்கவைத்து இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. திருவிழாக்கள், திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது உட்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் இந்த பானம் அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் காய்ச்சப்படுகிறது. இது அன்பு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

திகுர் சர்பத்:

சத்தீஸ்கரின் மற்றொரு தனித்துவமான பானமான திகுர் சர்பத், பாலோ என்றும் அழைக்கப்படுகிறது. இது குர்குமா அங்கஸ்டிபோலியா எனப்படும் உள்நாட்டு மூலிகையின் வேர்த்தண்டு கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பானம் தயாரிப்புக்கான செயல்முறை பல நாட்கள் நீடிக்கும். முதலில் வேர்த்தண்டுக்கிழங்கை சுத்தம் செய்து, இரவில் ஊறவைத்து, மறுநாள் விழுதாக அரைக்கப்படுகிறது. பின்பு சூரிய ஒளியில் உலர்த்தப்பட்டு கரையக்கூடிய மாவு பொருளாக மாற்றப்படுகிறது. அதனை கொண்டு இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த இந்த பானம் எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.

நொங்கு சர்பத்:

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் நொங்குவில் தயாரிக்கப்படும் இந்த பானம் உடனடியாக தாகத்தை தணிக்கும் தன்மை கொண்டது. அதன் மென்மை தன்மையும், சுவையும் அடிக்கடி ருசிக்க தூண்டும். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பல்வேறு நன்மைகளையும் வழங்கக்கூடியது.

சர்க்கரை, தண்ணீர் மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஆனாலும் பலர் மாம்பழம், ரோஸ் மில்க் மற்றும் பாலுடன் கலந்து பருகுகிறார்கள்.
Tags:    

Similar News