லைஃப்ஸ்டைல்
இன்று உலக முதியோர் தினம்

இன்று உலக முதியோர் தினம்: வாழ்த்துகளை கூறி ஆசி பெறலாம்

Published On 2021-10-01 04:17 GMT   |   Update On 2021-10-01 04:17 GMT
தள்ளாத வயதில் தவிக்க விடாமல் அனைத்து முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறலாம். முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடத்த வேண்டும்.
அனுபவங்களின் அமுதசுரபியாக திகழ்பவர்கள் முதியவர்கள். வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி போன்ற வார்த்தைகளை சமுதாயத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம்.

வயது என்பது முதுமைக்கான அளவுகோல் இல்லை என்றாலும், வயதானவர்களை முதியவர்கள் என்று அழைக்கிறோம். உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும், ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக கடந்த 1991-ம் ஆண்டு முதல் அக்டோபர் 1-ந்தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முதியோர் தினத்திற்கு என்று ஒரு பொதுத்தலைப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தலைப்பு அனைத்து வயதினருக்கும் டிஜிட்டல் சமத்துவம் ஆகும்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது:-

“முதுமையில் ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் பார்த்தால், மூளை மற்றும் நரம்பு மண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்பு மண்டல அணுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு குறைபாடுகளால் முதியவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகிறது.

முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிப்பதால் பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

தள்ளாத வயதில் தவிக்க விடாமல் அனைத்து முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறலாம். முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடத்த வேண்டும்.

முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு முறையை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத காலம் வரட்டும் என்று உறுதி ஏற்றுக்கொள்ளலாம்.
Tags:    

Similar News